பெரியவர் தகுதி: பந்தாவா? பணியா?
மத்தேயு 23:1-12
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் இத்திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
“வெட்டி பந்தா வேஸ்ட்” என்பது தொலைக்காட்சியில் நாம் பார்த்த ஒரு விளம்பரம். பந்தா செய்பவர்கள் எல்லாம் வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு வர முடியாது. செல்வாக்கு நிரம்பிய பெரிய ஆளாகவும் அவர்கள் மாற முடியாது. பின் யார்தான் செல்வாக்கு படைத்த பெரிய மனிதராக மாற முடியும். அதை நற்செய்தி வாசகம் நறுக்கென சொல்கிறது.
பணி செய்கிறவர்களே விண்ணரசில் பெரியவராக கருதப்படுவார். அவர்கள் என்றும் அழியாமல் இருப்பார்கள். அவர்கள் பலர் மத்தியிலும் மனங்களிலும் வாழ்வார்கள். அவர்களின் செல்வாக்கு அவர்கள் சென்றாலும் செல்லாது. இந்த பணியில் இவர்கள் செய்யக் கூடாதவைகள் இரண்டு
1. தங்களை உயர்த்தக் கூடாது
மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒருபோதும் தங்களை உயர்த்திக் காட்டக் கூடாது. பணிவு பணியிலே மிக மிக அவசியம்.
2. அடுத்தவரை தாழ்வாக்க கூடாது
அடுத்தவர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் இருக்க வேண்டும். யாரையும் தாழ்வாக கருதக் கூடாது. அடுத்தவர்கள் கருத்துக்களை மதித்து அவர்களை உயர்த்தும் எண்ணமே எப்போதும் வெற்றியைத் தரும்
மனதில் கேட்க…
1. நான் பந்தா செய்வதைக் குறைத்து பணி செய்ய ஆரம்பிக்கலாமா?
2. தம்மைத்தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர் இது மிகவும் சரிதானே?
மனதில் பதிக்க…
உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்(மத் 23:11)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா