பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். 1 யோவான் 4 : 18
கடவுள் நம்மீது அன்பு வைத்தது போல நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புக்கூற கடனாளிகளாயிருக்கிறோம். ஏனெனில் கடவுளை நாம் கண்டதில்லை. ஆனால் நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புக்கூர்ந்தால் கடவுள் நமக்குள் வந்து வாசம் செய்து நம்மில் நிலைத்தும் இருப்பார். அப்பொழுது அவருடைய அன்பு நமக்குள் கிரியை செய்து அது பூரணமாகும். அதை அறிந்துக்கொள்ளவே கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் அவரின் ஆவியை நமக்கு தந்திருக்கிறார். அந்த ஆவியின் மூலம் நாம் அவரில் நிலைத்திருப்பதை அறிந்துக்கொள்ள முடியும்.
கடவுள் நம்மேல் வைத்த அன்பை நாம் அறிந்து விசுவாசித்தால் அவர் அன்பாகவே இருக்கிறார், என்பதை உணர்ந்து நாம் அவரிலும், அவர் நம்மிலும் நிலைத்திருக்க முடியும். அவ்வாறு நிலைத்திருந்தோமானால் நியாயத்தீர்ப்பு நாளைக் கண்டு நாம் மனம் கலங்காமல் தைரியத்துடன்
அவர் முன் நிற்கலாம்.
ஏனெனில், அன்பிலே பயமில்லை: பூரண அன்பு பயத்தைப் புறம்பேதள்ளும். பயமானது வேதனையுள்ளது. பயப்படுகிறவன் அன்பிலே பூரணப்பட்டவன் ஆகமுடியாது. கடவுள் முந்தி நம்மீது அன்புக்கூர்ந்து அந்த அன்பின் மகிமையையும்,வல்லமையையும், நமக்கு வெளிப்படுத்திக் காண்பித்துள்ளார்.
ஆகையால் நாம் கடவுளிடம் அன்புக்கூருகிறோம் என்று சொல்வோமானால் நாம் காணும் சகோதர, சகோதரிகளிடம் அன்புக்கூரவேண்டும். அப்படி இல்லாவிட்டால் நாம் பொய் சொல்கிறவர்களாக காணப்படுவோம். ஏனெனில் கடவுளிடம் அன்புக்கூறுகிறவர்கள் நம்முடைய
அருகில் இருப்பவர் யாவர் மீதும் அன்புக்கூரவேண்டும் என்கிற கற்பனையை,கட்டளையை நாம் கடவுளால் பெற்றிருக்கிறோம்.
அப்பேற்பட்ட அன்பிலே நாமும் நிலைத்திருந்து ஆண்டவர் விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்து அவருடைய செல்லப்பிள்ளைகளாய் அவர் பாதம் பணிந்து அவருக்கே மகிமையை செலுத்துவோம்.
அன்பின் இறைவா!!
உமது சாயலில் படைக்கப்பட்ட நாங்களும் உம்மைப்போல் அன்பாக இருக்க எங்களுக்கு அனுதினமும் போதித்து நாங்கள் நடக்க வேண்டிய பாதையில் வழிநடத்திச் செல்லும். நீர் இருக்கிறவராகவே இருக்கிற ஆண்டவர். இருக்கிறேன் என்றவர். நாங்கள் உம்மை பார்க்காதபோதும் எங்கள் உள்ளத்தில் உணர்த்தப்பட்டு உம்மிலே எப்பொழுதும் நிலைத்திருக்க உதவிச் செய்யும். உம்மிலே கரைந்து, கலந்து வாழ கரம் பிடித்து வழிநடத்தி காத்தருளும். இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் ஜீவனுள்ள தந்தையே!
ஆமென்! அல்லேலூயா!!