புனித சூசையப்பர் திருவிழா
திருக்குடும்பத்தின் தலைவராக இருந்து, குடும்பத்தை சவாலான காலக்கட்டத்தில், கடவுளின் திருவுளத்தை அறிந்து, அதனை சிறப்பாக வழிநடத்தியவர் புனித சூசையப்பர். தனக்குள்ளாக இருந்த குழப்பங்களுக்கு கனவு வழியே, தெளிவு பிறந்தபிறகு, கடவுளின் திருவுளம் இதுதான் என்றால், அதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன், என்று தனது வாழ்வு முழுவதும் பிரமாணிக்கத்தோடு வாழ்ந்தவர் இந்த புனிதர். நற்செய்தி நூல்களில் சொற்ப இடங்களில் மட்டுமே காணப்பட்டாலும், சிறப்பான எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்ந்தவர் புனித சூசையப்பர்.
இயேசுவின் வளர்ப்பு தந்தை சூசையப்பரின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 19 ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொடக்கத்தில் இந்த விழா வழிபாட்டு அட்டவணையில் இருந்ததை, எட்டாம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ”காப்டிக்” என்று அழைக்கப்படும் எகிப்து நாட்டு திருவழிபாட்டு மரபில், புனித சூசையப்பர் விழா ஜீலை 20 அன்று கொண்டாடப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன. சிலுவைப்போர்களில் கிறிஸ்தவர்கள் வெற்றிபெற்றனர். அந்த வெற்றிக்கு நன்றியாக, சூசையப்பருக்கு ஆலயத்தைக்கட்டி, மார்ச் 19 ம் தேதி இவரது விழா கொண்டாடப்பட்டு வந்தது. சியன்னா நகர பெர்நார்டின் போன்ற பிரான்சிஸ்கன் துறவிகள், இவருக்கு அளிக்கப்படும் வணக்கம், மேலும் சிறப்புற முயற்சிகள் எடுத்து, அதில் வெற்றியும் பெற்றனர். கி.பி 1920 முதல் உரோமைய திருப்பலி நூலிலும் இந்த திருவிழா இடம்பெற்று, உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
புனித சூசையப்பரை பலவற்றிற்கு பாதுகாவலராக திருச்சபை ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து இந்த புனிதரின் சிறப்பை, திருச்சபை அவருக்கு அளித்திருக்கிற மகுடத்தை நாம் புரிந்து கொள்ளலாம். புனித சூசையப்பரிடம் நமது தேவைகளை நம்பிக்கையோடு எடுத்துச் சொல்வோம். பொறுமையின் சிகரமான புனித சூசையப்பர், நிச்சயம் நமது மன்றாட்டுக்களை, தனது பரிந்துரையின் மூலமாக இறைவனிடம் பேசி, நமக்குப் பெற்றுத்தருவார்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்