புத்தாண்டு + கன்னி மரியாள் – இறைவனின் தாய் பெருவிழா
கடவுளே, எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக !
புதிய ஆண்டின் முதல் நாளாகிய இன்று நமது பதிலுரைப் பல்லவி இவ்வாறு இறைவனின் ஆசியை வேண்டுகிறது: “கடவுளே, எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக”.
என்ன அருமையான வேண்டுதல்! ஆண்டின் முதல் நாளில் மட்டுமல்ல, ஆண்டின் ஒவ்வொரு நாளும் காலை தோறும் நாம் எழுப்ப வேண்டிய நல்லதொரு வேண்டுதல். இந்த வேண்டுதல் நமக்கு இரண்டு இறையியல் உண்மைகளை நினைவூட்டுகிறது:
1. இறைவனின் ஆசி இன்றி, நம்மால் வெற்றி பெற இயலாது. நமது பணிகள் பலன் தரமாட்டாது. எனவே, இறைவனின் துணையுடனே நமது அன்றாடக் கடமைகள் ஆற்றப்பட வேண்டும்.
2. இறைவன் இரக்கம் நிறைந்தவர், அவரது பேரிரக்கம் நம்மோடு என்றுமுள்ளது. நாம் கேட்காமலே நம்மீது இரக்கம் பொழியும் இறைவன், ஆவலோடு வேண்டும்போது நிச்சயம் ஆசிகளை மழையெனப் பொழிவார்.
திருப்பாடல் 67 ஒரு நன்றிப் புகழ்ப்பா. “நரம்பிசைக் கருவிகளுடன் பாடவேண்டிய புகழ்ப்பாடல்” என மூல மொழியிலேயே குறிப்பு தரப்பட்டிருக்கிறது. இந்தப் புகழ்ப் பாடலை ஆண்டின் முதல் நாளில் பாடுவது பொருத்தமானது.
இத்திருப்பாடலின் இரண்டாம் வசனம் நம் கவனத்தை ஈர்;க்கிறது: “உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக. அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும். பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர்”.
ஆம், இறைவனின் ஆசியை நாம் பெறுவதுகூட, நற்செய்தி அறிவிப்புப் பணிக்காகத்தான். இறைவனின் இரக்கத்தையும், ஆசிகளையும் பெறுகின்ற நாம் பிற இனத்தாருக்கு, நம் அயலாருக்கு இறைவனின் மீட்பை அறிவிக்க வேண்டும் என்னும் அழைப்பையும் இந்தத் திருப்பாடல் தருகிறது. இறைவனின் ஆசிகளைப் பெற்று, அவரது மீட்பின் செய்தியைப் பிறருக்கு அறிவிப்போமா!
மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் தந்திருக்கிற இந்தப் புதிய ஆண்டு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இந்தப் புதிய ஆண்டில் உமது ஆசிக்காக இறைஞ்சுகிறோம். உமது ஆசிகளையும், பேரிரக்கத்தையும் பெறுகின்ற நாங்கள், அவற்றைப் பிறருக்கும் நற்செய்தியாக அறிவிக்கும் தூதர்களாகத் திகழ்வோமாக, ஆமென்.
அருள்பணி. குமார்ராஜா