புத்தாண்டு, கன்னி மரியாள் – இறைவனின் தாய் பெருவிழா
கடவுளே, எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக !
புதிய ஆண்டின் முதல் நாளாகிய இன்று நமது பதிலுரைப் பல்லவி இவ்வாறு இறைவனின் ஆசியை வேண்டுகிறது: “கடவுளே, எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக”.
என்ன அருமையான வேண்டுதல்! ஆண்டின் முதல் நாளில் மட்டுமல்ல, ஆண்டின் ஒவ்வொரு நாளும் காலை தோறும் நாம் எழுப்ப வேண்டிய நல்லதொரு வேண்டுதல். இந்த வேண்டுதல் நமக்கு இரண்டு இறையியல் உண்மைகளை நினைவூட்டுகிறது:
1. இறைவனின் ஆசி இன்றி, நம்மால் வெற்றி பெற இயலாது. நமது பணிகள் பலன் தரமாட்டாது. எனவே, இறைவனின் துணையுடனே நமது அன்றாடக் கடமைகள் ஆற்றப்பட வேண்டும்.
2. இறைவன் இரக்கம் நிறைந்தவர், அவரது பேரிரக்கம் நம்மோடு என்றுமுள்ளது. நாம் கேட்காமலே நம்மீது இரக்கம் பொழியும் இறைவன், ஆவலோடு வேண்டும்போது நிச்சயம் ஆசிகளை மழையெனப் பொழிவார்.
திருப்பாடல் 67 ஒரு நன்றிப் புகழ்ப்பா. “நரம்பிசைக் கருவிகளுடன் பாடவேண்டிய புகழ்ப்பாடல்” என மூல மொழியிலேயே குறிப்பு தரப்பட்டிருக்கிறது. இந்தப் புகழ்ப் பாடலை ஆண்டின் முதல் நாளில் பாடுவது பொருத்தமானது.
இத்திருப்பாடலின் இரண்டாம் வசனம் நம் கவனத்தை ஈர்;க்கிறது: “உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக. அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும். பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர்”.
ஆம், இறைவனின் ஆசியை நாம் பெறுவதுகூட, நற்செய்தி அறிவிப்புப் பணிக்காகத்தான். இறைவனின் இரக்கத்தையும், ஆசிகளையும் பெறுகின்ற நாம் பிற இனத்தாருக்கு, நம் அயலாருக்கு இறைவனின் மீட்பை அறிவிக்க வேண்டும் என்னும் அழைப்பையும் இந்தத் திருப்பாடல் தருகிறது. இறைவனின் ஆசிகளைப் பெற்று, அவரது மீட்பின் செய்தியைப் பிறருக்கு அறிவிப்போமா!
மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் தந்திருக்கிற இந்தப் புதிய ஆண்டு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இந்தப் புதிய ஆண்டில் உமது ஆசிக்காக இறைஞ்சுகிறோம். உமது ஆசிகளையும், பேரிரக்கத்தையும் பெறுகின்ற நாங்கள், அவற்றைப் பிறருக்கும் நற்செய்தியாக அறிவிக்கும் தூதர்களாகத் திகழ்வோமாக, ஆமென்.
அருள்பணி. குமார்ராஜா
மரியா – இறைவனின் தாய்
மரியா, இறைவனின் தாய் என்கிற இந்த திருவிழா ஆண்டின் முதல் நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மரியா, இறைவனின் தாய் என்கிற இந்த திருவிழாவின் முக்கியத்துவம் என்ன? எதற்காக அவள் இறைவனின் தாய் என்று அழைக்கப்பட வேண்டும்? இதற்கு விடை தெரிய வேண்டுமென்றால், அதனுடைய வரலாற்றுப்பிண்ணனி நமக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.
கி.பி ஐந்தாம் நூற்றாண்டில், நெஸ்டோரியஸ் என்னும் கான்ஸ்டாண்டி நோபிளின் ஆயர், 429 ம் ஆண்டு, ஒரு ஞாயிற்றுக்கிழமை மறையுரையில், அன்னை மரியாளைப் பற்றி ஒரு தப்பறைக்கொள்கையைப் போதித்தார். இயேசுவில் இரண்டு ஆட்கள் இருக்கிறார்கள். மனித இயேசு ஒன்று, தெய்வீக இயேசு ஒன்று. அவரைப்பொறுத்தவரையில், மரியாள் பெற்றெடுத்தது மனித இயேசுவைத்தான். எனவே, அவள் இயேசுவின் அன்னை என்றுதான் அழைக்கப்பட வேண்டுமே தவிர, கடவுளின் தாய் என்று அழைக்கப்பட முடியாது. ஆனால், அதுவரை திருச்சபையின் போதனை, இயேசு ஒரே ஆள்தான். ஆனால், அவரிடத்தில் இரண்டு தன்மைகள் இருந்தன். (One Person and that is Divine Person but he had two natures namely humand and divine) ஒன்று மனிதத்தன்மை, மற்றொன்று தெய்வீகத்தன்மை. நெஸ்தோரியசின் இந்த போதனை, மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எபேசில் நடைபெற்ற திருச்சங்கத்தில் நெஸ்டோரியஸ் மற்றும் அவருடைய போதனை கண்டனம் செய்யப்பட்டது. எபேசு திருச்சங்கம், மரியா, இறைவனின் தாய் என்பதை உறுதிப்படுத்தியது. அந்த அறிவிப்பைக் கேட்ட எபேசில் கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரித்து இறைவனையும், அன்னை மரியாளையும் போற்றினர்.
அன்னை மரியாள் இறைவனுடைய மிகப்பெரிய கொடை. அவளது அன்பும், பண்பும், பரிவும் நமக்கு எந்நாளும் சிறந்த பலமாக இருக்கிறது. அந்த அன்னைக்கு எதிராக இன்றைக்கும் பல தவறான போதனைகள் பரப்பப்படுகிறது. அந்த போதனைகள் போலிகளால் போதிக்கப்படுபவை. அவற்றை அடையாளம் கண்டுகொண்டு, எந்நாளும் அன்னைமரியாளின் பரிந்துரைக்காக மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்