புதிய சிந்தனைகள்
எபிரேய மொழியிலிருந்து எழுதப்பட்ட கிரேக்க விவிலியத்தில், “ஆண்டவர்“ (Lord) என்ற வார்த்தை ”யாவே” (Yahweh) என்ற வார்த்தையின் மொழிபெயர்ப்பு. இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறபோதெல்லாம், இஸ்ரயேல் மக்கள் மனத்தில், கடவுளைப்பற்றிய எண்ணம் தான் வரும் எப்போதெல்லாம், அவர்கள் ”ஆண்டவர்” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்களோ, அப்போதெல்லாம், கடவுள் செய்த நன்மைகள், அவருடைய ஆற்றல்கள், மாண்பு மற்றும் மகத்துவம், இஸ்ரயேல் மக்களுக்கு நினைவில் வரும்.
இயேசு இந்த வார்த்தையை பயன்படுத்துவதன் மூலம், மக்கள் மனதில் ஒரு புதிய சிந்தனையை விதைக்கிறார். மெசியா என்றாலே, அரசர், போர், மண்ணகத்தில் அரசாட்சி என்ற மனநிலையோடு, சிந்தனையோடு வாழ்ந்து வந்த மக்களுக்கு, இயேசு இந்த வார்த்தையின் மூலம் கடவுளின் அரசை நினைவுறுத்துகிறார். மக்கள் மனதில் இருக்கக்கூடிய மெசியா, போர் தொடுத்து, கடவுளின் அரசை நிலைநிறுத்த வேண்டும் என்ற, எண்ணத்தை எடுத்துவிட்டு, உண்மையான மெசியா, அமைதியின் அரசர் என்ற செய்தியை அவர் விதைக்கிறார்.
இயேசுவின் மிகப்பெரிய சவால், மக்களின் தவறான புரிதல்களை அகற்றிவிட்டு, புதிய சிந்தனைகளை, புதுமை சிந்தனைகளைப் புகுத்த வேண்டும் என்பதுதான். காலத்திற்கேற்ப, நாம் நமது எண்ண ஓட்டங்களை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். நமது சிந்தனைகள் பழமையிலே ஊறியிருக்கக்கூடாது. வளர்ச்சிக்கான புதிய சிந்தனைகள், ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் வருகின்றபோது, அதை நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்