புதிய ஆண்டில் புதிய நம்பிக்கைகள் !
இன்று புத்தாண்டு விழா. இறைவனின் அன்னையாம் தூய மரியாவின் பெருவிழா. நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் நம் தாயின் ஆசியோடு தொடங்குதுதானே நமது பண்பாடு. எனவே, இந்தப் புத்தாண்டையும் இறைவனின் தாயும், நம் விண்ணக அன்னையுமான மரியாவின் ஆசியோடு தொடங்குவோமா!
கடந்த ஆண்டின் ஏமாற்றங்கள், தோல்விகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, புதிய எதிர்நோக்கோடு இந்த ஆண்டைச் சந்திக்க ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். நம் வாழ்வின் தனிப்பட்ட போராட்டங்கள், பொதுநீதிப் போராட்டங்கள் அனைத்தும் தோற்றுப்போகுமோ என்னும் கவலையும், கலக்கமும் நம்மைத் தாக்கலாம். ஆனால், இன்றைய இறைவாக்கு நமக்கு ஊக்கமூட்டுகிறது. மரியா, யோசேப்புடன் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தை இயேசுவைக் கண்ட இடையர்கள் வியப்படைந்தனர், மகிழ்ச்சியும் அடைந்தனர். “அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழ்ந்திருந்தது”. எனவே, கடவுளைப் போற்றிப் பாடிக்கொண்டே திரும்பிச் சென்றனர். “ஆண்டவர் உனக்கு ஆசிவழங்கி உன்னைக் காப்பாராக” என்னும் ஆண்டவரின் ஆசிமொழி ஆண்டின் முதல் நாளில் நமக்கு வழங்கப்படுகிறது. இந்த வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டு நமக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழும் என்ற நம்பிக்கையுடன் நமது பயணத்தைத் தொடர்வோம். அன்னை மரியாவின் ஆசியும், துணையும் நம்மோடு இருக்கும்.
மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் தந்திருக்கிற இந்தப் புதிய ஆண்டு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இந்தப் புதிய ஆண்டில் உமது ஆசிக்காக இறைஞ்சுகிறோம். எங்களது கடமைகள், பணிகள், போராட்டங்கள் அனைத்தும் வெற்றிபெற உமது தூய ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~ பணி. குமார் ராஜா