பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்
திருப்பாடல் 96: 1 – 2a, 2b – 3, 7 – 8, 10
இந்த திருப்பாடல் 1 குறிப்பேடு 16 வது அதிகாரத்தோடு தொடர்புடையது. கடவுளின் பேழை நகரத்தின் கூடாரத்தில் வைக்கப்படுகிறது. பின்பு எரிபலிகளும், நல்லுறவுப் பலிகளும் செலுத்தப்படுகிறது. கூடியிருந்த மக்கள் கடவுளைப் போற்றிப்புகழவும், மகிமைப்படுத்தவும் செய்தனர். கடவுளின் மகிமையும், மகத்துவமும் இங்கே பாடலாக வெளிப்படுத்தப்படுகிறது.
இஸ்ரயேல் மக்கள் வணங்கும் கடவுள் தான், அனைத்துலகத்திற்கும் அரசர் என்கிற செய்தி, அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப்படுகிறது. கடவுளை புற இனத்து மக்களுக்கு அறிமுகப்படுத்துகிற மிகப்பெரிய பொறுப்பு இஸ்ரயேல் மக்களுக்கு இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் தான் கடவுளின் வல்ல செயல்களை முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் கடவுளின் ஆற்றலையும், வல்லமையையும் முழுமையாக அனுபவித்திருக்கிறார்கள். கடவுளைப்பற்றி முழுமையாக அறிந்திருக்கிற இஸ்ரயேல் மக்கள் கண்டிப்பாக, இதனை பிற இனத்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிப்பதன் மூலம் பிற இனத்து மக்களும், உண்மையான இறைவனை முழுமையாகக் கண்டுகொள்ள முடியும். அவர்களும் இறைவனின் வல்லமையை அறிந்து உணர முடியும்.
நமது வாழ்க்கையில் நாமும் கடவுளின் இரக்கத்தை முழுமையாக அறிந்து வாழ, அனுபவித்ததை மற்றவர்களோடு பகிர்ந்து, உண்மையான இறைவனை மற்றவர்களுக்கு அறிவிக்க உறுதி எடுப்போம். கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக விளங்குவோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்