பிற இனத்தாருக்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்
திருப்பாடல் 96: 1, 3, 4 – 5, 11 – 12, 13
பிற இனத்தவர்க்கு எதற்காக ஆண்டவரைப்பற்றிய செய்தியினை எடுத்துரைக்க வேண்டும்? இது கடவுளின் புகழை அனைத்து உலகினரும் அறிய வேண்டும் என்பதற்காகவா? கடவுளின் பலத்தை அறியச் செய்வதற்காகவா? நிச்சயமாக இது காரணமாக இருக்க முடியாது. கடவுளைப் பற்றி வெறும் புகழையும், வல்லமையையும் மற்றவர்கள் அறியச்செய்து, அவர்களை பயமுறுத்துவதற்காகவோ, அடிமைப்படுத்துவதற்காகவோ இதனை ஆசிரியர் சொல்கிறார். பின் எதற்கு ஆண்டவரது மாட்சியை அறிவிக்கச் சொல்கிறார்?
ஆண்டவரது மாட்சியை அறிவிக்கச் சொல்வது, மற்றவர்களும் உண்மையான கடவுளை அறிந்து மீட்பு பெற வேண்டும் என்பதற்காக. இது சுயநலத்திற்கானது அல்ல. பொதுநலத்திற்கானது. அனைவரும் மீட்பு பெற வேண்டும் என்கிற பரந்த நோக்கத்தைக் கொண்டது. இறைவனின் அருமை பெருமைகளை அறிய வருகிறபோது, மற்றவர்களும் கடவுளிடத்தில் வருகிறார்கள். அவரின் அன்பைப் பெற்றுக்கொள்கிறார்கள். இவ்வாறு, பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியை நாம் மட்டும் அனுபவிக்கலாகாது. மாறாக, இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்கிற பரந்த மனப்பான்மையோடு இந்த திருப்பாடல் எழுதப்பட்டிருக்கிறது.
நம்முடைய வாழ்விலும் கிறிஸ்தவர்களாக நமக்கென்று மிகப்பெரிய கடமை இருக்கிறது. நம்முடைய வாழ்வு மூலமாக கடவுளைப் பற்றியச் செய்திகளை மற்றவர்களுக்கு அறிவிப்பதே அந்த நற்செய்தியாகும். நாமும் இந்த செய்தியினை மற்றவர்களுக்கு நம்முடைய வாழ்க்கை மூலமாக அறிவிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்