பிறர் இயேசுவை தேடி வரும்படி செய்வோம்!
லூக்கா 9:7-9
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
இயேசுவின் நற்செயல்களால் மயங்கிப்போன மக்கள் பல இடங்களில் நன்றி மறவாமல் இயேசுவைப் பற்றி துல்லியமாக அறிவித்தனர். எல்லா இடங்களிலும் இயேசுவின் புகழ்மணம் கமழ்ந்தது. எங்கும் இயேசு என்ற பெயர் ஒலித்தது. ஆகவே இயேசு என்ற பெயரின் அதிர்வலைகளில் பாதிக்கப்பட்ட ஏரோது, இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான். இயேசு என்ற பெயர் எவ்வளவு வல்லமை மிக்கது என்பதை நாம் பிறருக்கு அறிவிக்கவும், நம்முடைய செயல்பாடுகளால் பலர் இயேசுவை தேடி வரும்படி செய்யவும் இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை அழைக்கிறது. இரண்டு விதத்தில் இயேசுவை பிறர் தேடி வரும்படி செய்யலாம்.
1. பழக்கம்
கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த நாம் நம்முடைய பழக்கத்தை நமக்குள் மட்டும் சுருக்கிக்கொள்ளாமல் அடுத்த சமயத்தினரோடும் மிகவும் எளிதாக வைத்திருக்கும்போது கள்ளமில்லா உறவு உருவாகிறது. அந்த உறவே நம் சமயத்தின் மீதான ஒரு வாசத்தை அவர்களுக்கு கொடுக்கிறது. நாளடைவில் அந்த வாசத்தை நோக்கி அவா்கள் வர வாய்ப்பு உள்ளது.
2. பயிற்சி
இயேசு நமக்கு கற்றுக்கொடுத்த போதனைகளை நாம் பயிற்சி செய்யும் போது அது அடுத்தவருக்கு வியப்பாக இருக்கிறது. அந்த வியப்பு ஒரு ஆச்சரியத்தைக் கொடுக்கும். அந்த ஆச்சரியம் நம் ஆண்டவரை காணச் செய்யும். இதன் விளைவாக ஆண்டவர் பற்றிய ஒரு ஆனந்த அதிர்வலை அவர்கள் ஆன்மாவில் உண்டாகும்.
மனதில் கேட்க…
1. யாராவது ஒருவர் இயேசுவை தேடி வரும்படி நான் செய்திருக்கிறேனா?
2. என்னுடைய பழக்கத்தாலும், பயிற்சியாலும் நான் பிறருக்கு எடுத்துக்காட்டாக அமையலாம் அல்லவா?
மனதில் பதிக்க…
நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்(1கொரி 9:8)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா