பிரிவினைகளை அகற்றுவோம்
இயேசுவின் செபம் என்ன? நாமெல்லாம் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பதுதான். எப்படி ஒன்றாய் இருக்க வேண்டும்? நாமெல்லாம் ஒன்றாய் இருப்பது சாத்தியமா? நமக்குள்ளே பல அடிப்படை வேறுபாடுகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். புரிதலில், வாழ்க்கைமுறையில், பண்பாட்டில், வழிபாட்டு முறையில் என பல வேறுபாடுகள் நம் மத்தியில் இருக்கிறது. இத்தகைய வேறுபாடுகள் நமக்குள்ளாக பல பிரிவினைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பிரிவினைகளாக இருப்பவை எப்படி நம்மை ஒன்றுபடுத்த முடியும்?
இயேசு நம்மை அன்பால் ஒன்றுபட செபிக்கிறார். நமக்குள் இருக்கக்கூடிய வேறுபாடுகளை அவர் அறியாதவர் அல்ல. அந்த வேறுபாடுகள் ஒருவர் மற்றவர் மீதுள்ள அன்பை, மதிப்பைக் கூட்ட வேண்டுமே தவிர, குறைக்கக்கூடாது. கடவுளை நாம் அன்பு செய்தால், கடவுள் மீது நாம் நம்பிக்கை வைத்தால், கடவுளை நமது தந்தையாக ஏற்றுக்கொண்டால், ஒருபோதும் நமக்குள்ளாக இருக்கக்கூடிய பிரிவினைகள் பெரிதாகத் தோன்றாது. கடவுள் மீது நமக்கு நம்பிக்கை இல்லை என்பதுதான், நமக்குள்ளாக இருக்கக்கூடிய பிரிவினைகளைப் பெரிதாகக்காட்டுகிறது. இந்த பிரிவினைகளுக்குள்ளாக நாம் இருந்தால், கடவுள் நம் வாழ்வில் இருக்க முடியாது.
இன்றைக்கு கத்தோலிக்கத்திருச்சபையின் மிகப்பெரிய தடைக்கல்லாக இருப்பது இந்த பிரிவினைகள். நமக்குள்ளாக நாமே பிளவுபட்டு இருக்கிறோம். நமக்குள்ளாக பிரிவினைகள் இருக்கிறபோது, நம்மால் எப்படி கடவுளுக்கேற்ற ஒரு வாழ்வை வாழ முடியும். எனவே, நமக்குள்ளாக இருக்கக்கூடிய பிரிவினைகளை அகற்றுவோம். இயேசுவின் பெயரால் ஒன்றுபடுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்