பின்பற்றியவர் பிரபலமானார்
திருத்தூதர் மத்தேயு திருவிழா
பின்பற்றியவர் பிரபலமானார்
மத்தேயு 9:9-13
இறையேசுவில் இனியவா்களே! திருத்தூதர் மத்தேயு திருவிழா திருப்பலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
மத்தேயு என்ற பெயரின் பொருள் “யாவேயின் பரிசு” என்பதாகும். அல்பேயுவின் மகனான மத்தேயு, உரோமை ஆளுகையில் இருந்த யூதேயாவின் கலிலேயா பகுதியில் பிறந்தவர். உரோமையரின் ஆளுகையின் கீழ், யூதேய குறுநில மன்னன் ஏரோது அந்திபாசுக்காக கப்பர்நாகும் சுங்கச்சாவடியில் வரி வசூலிப்பவராக மத்தேயு பணியாற்றினார். கிரேக்க, அரமேய மொழிகளில் மத்தேயு தேர்ச்சி பெற்றிருந்தார். இயேசு கிறிஸ்துவைத் தொடக்கம் முதலே பின்பற்றிய சீடர்களுள் மத்தேயுவும் ஒருவர். புதிய ஏற்பாட்டின்படி, இயேசுவின் உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார்.
ஆண்டவர் இயேசுவை பின்பற்றுகிற ஒவ்வொருவரும் மிகவும் பிரபலமாக மாறுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதற்கான அருமையான உதாரணம் தான் திருத்தூதர் மத்தேயு. மத்தேயு பாவியாக இருந்த அவர் அனைவராலும் இகழப்பட்டார். இயேசுவோடு சேர்ந்த பிறகு அனைவராலும் வாழ்த்தப்பட்டார். மிகவும் பிரபலமானார். உங்களுக்கு ஆசை இருக்கிறதா? வாருங்கள் நாமும் மத்தேயுவைப் இரண்டு காரியங்களைச் செய்து பிரபலமாவோம்.
1. இயேசுவை சார்ந்து இருத்தல்
முழுவதும் இயேசுதான் என்ற எண்ணத்தோடு திருத்தூதர் மத்தேயு வாழ்ந்து வந்தார். இருப்பதும் இயங்குவதும் எல்லாமே இயேசுவதால் தான் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார். ஆகவே அவருக்குள் செருக்கு, கர்வம் எல்லாம் காணாமல் போனது. ஆகவே மக்களுக்கு அவரைப் பிடித்தது. பிரபலமானார்.
2. இயேசுவை சேர்ந்து இருத்தல்
இயேசுவுக்கு பிடித்ததையே திருத்தூதர் மத்தேயு செய்தார். இயேசு கட்டளையிட்டதையே கடைப்பிடித்தார். நற்செய்தி முழுவதும் அவர் எழுத்துக்கள் அவர் இயேசுவோடு சேர்ந்திருப்பதை சாட்சியாக சொல்கின்றன. சோ்ந்திருந்தவர் அனைத்திலும் கைத்தோ்ந்தவர் ஆனார். பிரபலமானார்.
மனதில் கேட்க…
1. எனக்கு மிகவும் பிரபலமாக ஆசை இருக்கிறதா? முயற்சிகள் எடுத்திருக்கிறேனா?
2. இயேசுவைச் சார்ந்து சேர்ந்து வாழ்கிறேனா?
மனதில் பதிக்க…
கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார்(1கொரி 5:14)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா