பாவிகளையே அழைக்க வந்தவர் நம் இயேசு. மாற்கு 2:17.
அன்பும்,பாசமும்,நிறைந்த இணையதள நெஞ்சங்களுக்கு,நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
இந்த உலகில் வாழும் ஒருவரிலாவது பாவமே செய்யாத மனுஷர் கிடையாது. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக பாவம் செய்கிறோம். அதனால் தான் கடவுள் மனுவுறுக்கொண்டு இந்த பூமியில் இறங்கி வந்தார். பூமிக்கு வந்தது மட்டுமல்லாமல் தமது உயிரையே கொடுத்தார். அதுவும் நாம் நேர்மையாளர் என்ற காரணத்துக்காக அல்ல. ஒருவேளை ஒரு நேர்மையாளருக்காக ஒருவர் தனது உயிரை கொடுக்கலாம். அதுவே அரிதான செயலாக இருக்கும் பொழுது நாம் பாவிகளாய் இருந்தபொழுது கிறிஸ்து நமக்காக தமது உயிரைக்கொடுத்தார். உயிரையே கொடுத்து தமது அன்பை வெளிப்படுத்தி நம்மை மீட்டுக்கொண்டார். ரோமர் 5:8.
மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என இயேசுவே லூக்கா 15:10ல் கூறுகிறார். ஏனெனில் அவர் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறவர். அதனால்தான் அவர் நேர்மையாளரை அழைக்க வராமல் பாவிகளையே அழைக்க வந்தார். மத்தேயு 9:13. நோயுற்ற ஒருவருக்கு ஒரு குணமாக்கும் மருத்துவர் எவ்வளவு அவசியமோ, அதுபோல பாவிகளாகிய நமக்கு அவரின் அன்பும், மீட்பும் தேவையான ஓன்று. நெறிதவறிய நம்மை மீட்கவே அவர் இந்த உலகில் வந்தார். மாற்கு 2:17 ,மத்தேயு 18:11, லூக்கா 5:31,32 ஆகிய வசனங்களில் இதை நமக்கு கூறுகிறார்.
வேதத்தில் நமக்கு ஒரு அழகான கதையின் மூலம் கடவுள் நாம் எப்படி வாழவேண்டும் என்று உணர்த்தியிருக்கிறார். நல்ல சமாரியர் கதையின் மூலம் அதை நன்கு உணர்ந்துக்கொள்ளலாம். தன்னை நேர்மையாளர் என்று காட்ட விரும்பிய ஒருவருக்கு இயேசு சொன்ன உவமை இது.
ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்கு போகும்பொழுது கள்வர் கையில் அகப்பட்டதால் கள்வர்கள் அவரது ஆடைகளை உரிந்து கொண்டு அவரை அடித்து குற்றுயிராக விட்டுப் போயினர். ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்து அவரைக் கண்டும் மறுப்பக்கமாக விலகி சென்றார். லேவியர் ஒருவர் வந்தும் அவரும் விலகி சென்றுவிட்டார். ஆனால் சமாரியர் ஒருவர் வந்து அவரைக் கண்டு அவர்மேல் பரிவு கொண்டு அவரின் காயங்களுக்கு மருந்து போட்டு தான் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி சென்று சாவடியில் கொண்டு விட்டு அங்குள்ள பொறுப்பாளரிடம் இவரை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். அதற்கான செலவை நான் திரும்பி வரும்பொழுது செலுத்துவேன் என்று சொல்லி அவசரசத்துக்கு உண்டான செலவை தந்து செல்கிறார். இந்த மூவரில் யார் நல்லவர் என்பது நமக்கு தெரிந்த ஒரு விஷயம். நாமும் இதைப்போல் கடவுள் விரும்பும் பிள்ளையாய் நடந்து அவருக்கே புகழை ஏற்படுத்துவோம். இந்த தவக்காலத்தில் நாம் அவரின் சாயலாக அன்பே உருவானவர்களாய் மாறி அவரைப்போல் வாழ முயற்சி செய்வோம். பாவிகளாகிய நம்மை கடவுள் நேசிப்பதுபோல் நாமும் மற்றவர்களை நேசிக்க கற்றுக்கொள்வோம் . அவரின் அன்பை விளங்க செய்து திருச்சட்டத்தை கடைப்பிடிப்போம்.
ஜெபம்
அன்பின் தேவனே உம்மை போற்றுகிறோம்,ஆராதிக்கிறோம். பாவிகளை மீட்க வந்த இயேசுவே, நாங்களும் உம்மைப்போல் வாழ்ந்து உமது சாயலை அணிந்துக்கொள்ள உதவி செய்யும். எங்களிடம் இருக்கும் பிடிவாதக்குணம், எரிச்சல், கோபம், பொறாமை, சுயநலம், தற்பெருமை, எல்லாவற்றையும் எங்களிடம் இருந்து நீக்கி உம்மைப்போல் அன்பும், தியாகமும், இரக்கமும், தயவும் உள்ளவர்களாய் மாறி உமது பெயருக்கே மகிமை உண்டாக வாழ்ந்து உமது அன்பை நிலைநாட்டி, மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்து அவர்களையும் உம்மண்டை சேர்க்க உதவி செய்யும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் பரம
தகப்பனே! ஆமென்!! அல்லேலூயா!!!.