பாவத்திலிருந்து விடுதலை பெறுவோம்
‘உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்’ என்று இயேசு கூறிய வார்த்தைகள், யூதர்களுக்கு கோபத்தைத்தூண்டுகிறது. அவர்களுடைய பதில்: ‘நாங்கள் யாருக்கும் அடிமைகளாய் இருந்ததில்லை. பின் ஏன் எங்களுக்கு விடுதலை?’. யூதர்களின் பதில் உண்மைக்குப்புறம்பானது போலத் தோன்றுகிறது. ஏனெனில், யூதர்கள் எகிப்தியர்களிடம் அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். அதேபோல் இயேசு வாழ்ந்த காலத்தில், உரோமையர்களிடம் அடிமைகளாய் இருந்திருக்கிறார்கள். அப்படியிருக்கையில் எப்படி யூதர்கள் இயேசுவிடம் தாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்று கூறமுடியும்? சற்று ஆழமாக சிந்தித்துப்பார்த்தால், யூதர்கள் சொல்வதில் தவறு ஏதுமில்லை. யூதர்களைப்பொறுத்தவரையில், அவர்களுக்கு கடவுள் மட்டும் தான் அரசர். வேறு எவரையும் அரசராக ஏற்றுக்கொள்வதில்லை. எனவேதான், உரோமையர்களுக்கு அடிமைகளாக இருந்தகாலத்தில், பல்வேறு புரட்சிப்படைகள் ஆங்காங்கே தோன்றி, விடுதலைக்காக போரிட்டுக்கொண்டிருந்தனர். வெளிப்படையாக அடிமை என்று தோற்றம் இருந்தபோதிலும், அவர்களின் உள்ளம் சுதந்திரமானதாக, கடவுளை மட்டும் ஏற்றுக்கொள்வதாக இருந்தது. இந்த சுதந்திரத்தை அடிமைத்தனம் என்ற பெயரில் அவர்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது. எனவேதான், அவர்கள் இப்படிச்சொல்கிறார்கள்.
இயேசு இங்கே அடிமைத்தனம் என்று சுட்டிக்காட்டுவது, இந்த உலகம் சார்ந்த அடிமைத்தனம் அல்ல, மாறாக, பாவம் சார்ந்த அடிமைத்தனம். பாவத்திற்கு அடிமைகளாக இருக்கிறவர்கள், தங்கள் மீதான கட்டுபாட்டை இழந்துவிடுகிறார்கள். பாவம் தான் அவர்களுக்கு எஜமானனாக இருக்கிறது. பாவம் அவர்களை ஆட்டுவிக்கிறது. அடிமை என்கிறவன் தன் எஜமானன் என்ன சொல்கிறானோ, அதைச்செய்கிறான். அதேபோலத்தான் பாவம் செய்கிறவன், தனக்கு எஜமானனாக இருக்கக்கூடிய பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான். இயேசு இங்கே ஓர் உருவகத்தைப் பயன்படுத்துகிறார்: மகன் மற்றும் அடிமை. மகனுக்கு வீட்டில் நிலையான இடம் உண்டு. ஆனால், அடிமையின் நிலை அப்படி அல்ல. அவன் எந்த நேரமும் வீட்டிலிருந்து துரத்தப்படலாம். அதேபோல, தங்களை ஆபிரகாமின் வழிமரபினர், ஆபிரகாமின் மக்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் விண்ணகத்திற்குச் சென்று விடலாம் என்று நினைக்க முடியாது. அவர்கள் பாவத்திற்கு அடிமையானால், மகன் என்ற நிலையிலிருந்து துரத்தப்படுவார்கள். விண்ணக வாழ்வை இழந்து விடுவார்கள். எனவே, பாவம் அவர்களை அடிமைநிலைக்கு உட்படுத்தாதபடி எச்சரிக்கையாக இருப்பதற்கு இயேசு அறைகூவல் விடுக்கிறார்.
இறைவனோடு நெருங்கிவர நமக்குத் தடையாக இருப்பது பாவம். இறைவனின் ஆசீரைப்பெறுவதற்கு நமக்கு தடையாக இருப்பது பாவம். நிறைவாழ்வை நோக்கி புனிதத்தன்மையோடு வாழ்வதற்கு நமக்கு தடையாக இருப்பது பாவம். பாவத்திற்கு அடிமையாக இருக்கும் நிலையிலிருந்து விடுதலை பெற, இறைஆற்றல் வேண்டி மன்றாடுவோம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்