பார்வைகள் பலவிதம்
இணைச்சட்டம் 25: 5 ல் பார்க்கிறோம், ”உடன்பிறந்தோர் சேர்ந்து வாழ்க்கையில், அவர்களில் ஒருவன் மகப்பேறின்றி இறந்துபோனால், இறந்தவனின் மனைவி குடும்பத்திற்கு வெளியே அன்னியனுக்கு மனைவியாக வேண்டாம். அவள் கொழுந்தனே அவளைத்தன் மனைவியாக ஏற்று, அவளோடு கூடிவாழ்ந்து, கணவனின் உடன்பிறந்தோன் செய்ய வேண்டிய கடமையை அவளுக்குச் செய்யட்டும்”. இயேசு வாழ்ந்த காலத்தில், இந்த சட்டத்தை நடைமுறையில் கடைப்பிடித்தார்கள் என்பது சாத்தியமில்லைதான். இருந்தாலும், சதுசேயர்கள் இந்தக்கேள்வியை இயேசுவிடம் கேட்கிறார்கள். பரிசேயர்களும், சதுசேயர்களும் இயேசுவுக்கு எதிராக இருப்பதில் ஒரே நேர்கோட்டில் இருந்தாலும், அவர்களுக்கிடையே ஏராளமான வேறுபாடுகள் இருந்தது.
பரிசேயர்கள் சட்டங்களை நுணுக்கமாகக் கடைப்பிடித்தார்கள். மறைநூலையும், வாய்மொழி விளக்கங்களையும் ஏற்றுக்கொண்டார்கள். உயிர்ப்பையும், வானதூதர்களையும் நம்பினர். எல்லாமே தலைவிதிப்படிதான் நடக்கிறது என்று பரிசேயர்கள் உறுதியாக நம்பினர். மீட்பரை எதிர்பார்த்திருந்தும் காத்திருந்தனர். ஆனால், சதுசேயர்கள் சட்டங்களின் காவலானாக இருந்தனர். பழைய ஏற்பாட்டு நூலை மட்டும், அதிலும் முதல் ஐந்து நூல்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்தனர். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாழ்வை வாழ சுதந்திரம் தரப்பட்டிருக்கிறது என்று நம்பினர். உயிர்த்தெழுதலை விசுவசிக்கவில்லை. மெசியா என்றொரு சிந்தனையும் அவர்களுக்கு எழவில்லை. உயிர்த்தெழுதல் பற்றிய சதுசேயர்களின் கேள்விக்கு இயேசுவின் பதில், நமது பார்வையைக்கொண்டு நாம் உயிர்த்தெழுதலைப் பார்க்கக்கூடாது என்பதுதான்.
நமது வாழ்வில் அனைத்தையும் நமது பார்வையில் வைத்துப்பார்த்து, நாம் தீர்மானிக்கிறோம், முடிவுக்கு வருகிறோம். மற்றவர்கள் பார்வையிலிருந்தும் பார்க்க வேண்டும், அதிலும் சிறப்பாக, கடவுளின் பார்வையிலிருந்து எல்லாவித நிகழ்வையும் பார்க்க வேண்டும். அப்படிப்பார்க்கிறபோது, நிச்சயம் நம்மால், ஒரு நிகழ்வை இன்னும் புரிதலோடு, அர்த்தத்தோடு பார்க்கலாம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்