பாடுகளின் வழி மாட்சி
தொ.நூ 15:5-12, 17-18, பிலி 3: 17-4:1
லூக் 9: 28-36
கடந்த ஞாயிறன்று இயேசுவின் பாலைவன அனுபவத்திற்கு நம்மை அழைத்து சென்ற அதே லூக்கா நற்செய்தியாளர் இந்த வாரம் நம்மை ஆண்டவரின் மலை அனுபவத்திற்கு நம்மை அழைத்து செல்கிறார். மலை என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது அமைதி, இயற்கை எழில் கொஞ்சும் சூழல், குளுகுளுவென்ற காலசூழ்நிலை, இவையனைத்தையும் தவிர விவிலிய பின்னனியில் மலைக்கும் இறைவனுக்குமிடையே நிறையதொடர்பு இருப்பதை நம்மால் காணமுடிகிறது. இறை-மனித சந்திப்பு நடக்கின்ற இடமாக பல இடங்களில் இதை உணர முடிகிறது.
எ.கா:-
- ஆபிரகாம் கடவுளின் குரலை மோரியா மலையில் அவரின் மகனை பலியிட முயற்சிக்கும்போது கேட்கிறார்.
- சீனாய் மலையில் மோசே கடவுளிடமிருந்து பத்துக்கட்டளைகளை வாங்குகிறார்.
- எலியா கார்மல் மலையில் பாகால் இறைவாக்கினர்கள் முன்னிலையில் இறைவனின் வல்லமையை வெளிப்படுத்துகின்றார்.
ஆனால் இன்றைய நற்செய்தியில் மலையின் பெயரினைக் குறிப்பிடாமல், ஓர் உயர்ந்த இடத்திற்கு தன் சீடர்களோடு செல்கிறார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. (‘தாபோர்’ –மலையாக இருக்கலாம்) மொத்ததில் ஓர் உயர்ந்த இடத்தில் உயர்வானவரை நாம் காணமுடியும், உணரமுடியும் என்பது தெளிவாகிறது. இதனடிப்படையில் தான் நம் கத்தோலிக்க தேவாலயங்களில் பீடம் உயர்வாக கட்;டப்படுகிறது என்பது நம் கூடுதல் அறிவுக்கானது. ஒவ்வொரு திருப்பலியும் இறை-மனித சந்திப்பின் நேரம், நம்மை உருமாற்றும் நேரம் என்பதை நாம் மறந்து விடலாகாது. அங்கு இயேசுவின் உடலும் ஆடையும் வெண்மையாய் பிரகாசித்தது போல, இன்று நம் திருப்பலியில் வெண்ணிற அப்பம் அவரின் உடலாக மாறி பிரகாசிக்கின்றது. கடவுள் இவ்வுலகிற்கு இறங்கி வருவதை நாம் ஆழமாக இந்த வேளையில் உணர வேண்டும்.
மோசேவுக்கும் எலியாவுக்கும் இயேசுவுக்கும் என்ன தொடர்பு என்பதை நாம் தெரிந்து கொள்வோம். இவர்கள் இருவரும் மலையின் மீது இறைவனைக் கண்டவர்கள். ( வி.ப 24: 15-18, 1அர 19 : 8-13) இவர்கள் இருவரும் தனக்குபின் வழித் தோன்றல்களை ,இறைவாக்கினர்களை விட்டு சென்றவர்கள். (இச 34:9, 1அர19:16-19) இவர்கள் இருவரும் விண்ணேற்றமடைந்தவர்கள். மீண்டும் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டவர்கள். இவை அனைத்தையும் இயேசுவினுடைய வாழ்விலும் காணலாம்.
பேதுருவின் நிலைபாட்டினை நாம் எவ்வாறு எடுத்துக் கொள்வது.
1) இந்த திருவெளிப்பாட்டினைப் பார்த்து, பேதுரு அம்மகிழ்ச்சியிலே இருந்து விட ஆசைப்படுகிறார். இது முற்றிலும் தவறு. காரணம் இதனைக் காட்டிலும் மீட்பிற்கு சிலுவை என்பது இருப்பதினை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது பேதுருவின் மனம். நாமும் நம் வாழ்வில் இன்பத்தை, நல்ல தருணங்களை கடவுள் கொடுக்கும் போது அதனை மட்டுமே பிடித்துக் கொண்டு இருக்கத் தோன்றுகிறது. துன்பத்தை ஏற்றுக்கொள்ள மனம் பதருகிறது. தவிர்க்கிறது. அனைத்தையும் இறைத்திருவுளமாக ஏற்கவும், இன்பத்தையும், துன்பத்தையும் ஒரேப்போல கருதுவதே உண்மையான சீடத்துவம். கிறித்தவம்.
2) பேதுரு இயேசுவை எலியாவுக்கும், மோசேவுக்கும் இணையாகக் கருதுகிறார். அது எப்படி சாத்தியமாகும். அவர்களில் ஒருவர் யூதச்சட்டத்தின் பிரதிநிதி, மற்றொருவர் இறைவாக்கினர்களின் பிரதிநிதி. அனால் இயேசு மொத்த பழைய ஏற்பாட்டின் நிறைவு. இறைவனின் திருவுளத்தின் உச்சம். இறைவெளிபாட்டின் முழு நிறைவு. அவரே தந்தை, தந்தையே அவர்.
இந்த பேதுருவின் நிலைபாட்டினை உடனடியாக குறுக்கிடுவது மேகத்தினின்று வந்த குரல். அவரின் நிலைப்பாட்டினை தவறு என்று சுட்டிக்காட்டுகின்றது அக்குரல். இந்த மாட்சிமை நீட்டிக்க கூடாது. உடனடியாக அவர் சொல்வதைக் கேட்டு கீழ்படிய வேண்டும் என்ற கட்டளையையும் கொடுக்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த மாட்சிமையான உருமாற்றத்தின் மையமாக இருந்தது இயேசுவின் பாடுகளும் இறப்பும் தான். எனவே, பாடுகள் வழியே மாட்சி என்பதே நமக்கு இன்றைய நற்செய்தி எடுத்து கூறுகிறது.
எனவே, இந்த நாளில் நாம் பேதுருவினைப்போன்று மண்ணைச் சார்ந்தவர்களாக அல்லாமல், விண்ணைச் சார்ந்தவர்களாக வாழ்வோம். சாதாரண நிலப்பரப்புகளை விட மலைகள் உயர்ந்து நிற்பது போல நமது உள்ளங்களும் மண்ணோடு மண்ணாக இன்பங்கள் மட்டுமே தேவை என்ற மனநிலையையெல்லாம் விட்டுவிட்டு, பாடுகளில் வழியே மீட்பு என்பதை உணர்ந்தவர்களாக, இயேசுவின் பாடுகளில் பங்கெடுப்போம். நம் பாடுகளை, சிலுவைகளை அவரின் பாடுகளோடும், சிலுவையோடும் இணைப்போம். அவரோடு உயிர்ப்போம்.
– திருத்தொண்டர் வளன் அரசு