பவுலடியாரின் அர்ப்பண வாழ்வு
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாள் முதல், கிறிஸ்துவுக்காக உடல், பொருள், ஆன்மாக அனைத்தையும் முழுமையாக அர்ப்பணித்தவர் பவுலடியார். அவர் நற்செய்தியின் மீது கொண்ட தீராத அர்ப்பண உணர்வால், பல கடுமையான பயணங்களை மேற்கொண்டு, கிறிஸ்துவுக்கு உண்மையான சீடராக விளங்குவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அதனுடைய வெளிப்பாடாக இருப்பது தான், இன்றைய முதல் வாசகத்தில் அவர் சொல்லும் வார்த்தைகளாகும். ”நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தால் அது ஆதாயமே” என்கிற வார்த்தைகள், அவர் தன் வாழ்வை எப்படி வாழ்ந்தார் என்பதற்காக அடித்தளமாக அமைந்திருக்கிறது.
இந்த உலகத்தில் தனக்காக வாழ வேண்டும் என்று அவர் வாழவில்லை. தான் வாழ்ந்தால், இன்னும் ஏரளாமான ஆன்மாக்களை மீட்டெடுக்க முடியும். இன்னும் பல பயணங்களை மேற்கொண்டு, எங்கெல்லாம் கிறிஸ்துவை அறியாத மக்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம், நற்செய்தி அறிவிக்க முடியும், என்று அவர் நினைக்கிறார். அதே வேளையில், கிறிஸ்துவை சந்திக்க வேண்டும் என்கிற ஆவலும் அவரை வாட்டுகிறது. கிறிஸ்துவை முகமுகமாக தரிசிக்க வேண்டுமென்றால், கண்டிப்பாக அவர் இறந்து தான் ஆக வேண்டும். இறந்தால் கிறிஸ்துவைச் சந்திக்கலாம், ஆனால், அவருடைய பணியைச் செய்ய முடியாது. இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது? என்பது அவருக்கு குழப்பமாக இருக்கிறது.
எது எப்படியிருந்தாலும், அவர் நற்செய்தியின்பொருட்டு, கொண்டிருந்த அந்த அர்ப்பண உணர்வு நம்முடைய வாழ்விற்கு சிறந்த படிப்பினையாக இருக்கிறது. அவருடைய வாழ்க்கையை கிறிஸ்து ஒருவருக்காகவே வாழ்ந்தார். அவருக்காகவே அவர் எப்போதும் தன் வாழ்வை அர்ப்பணித்தார். அந்த அர்ப்பண வாழ்வை நாமும் வாழ, உறுதி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்