பழிவாங்கல்: தொடர் பகை தலைவிரித்தாடும்
மத்தேயு 18:21-19:1
இறையேசுவில் இனியவா்களே! இன்றைய திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
மனிதர்கள் செய்யும் தவறை மன்னிக்க முடியாமல் பழிவாங்கிக் கொண்டிருக்கும், பழிவாங்க காத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இன்றைய நற்செய்தி வாசகம் “போதும், உங்கள் செயலை நிறுத்துங்கள்” என்ற அறைகூவலோடு வருகின்றது.
பழிவாங்குவது என்பது மனிதனை மிருகமாக்கும் குணம். பயம், கோபம், வெறுப்பு ஆகியவையே இந்த பழிவாங்கலின் பின்னால் ஒளிந்து கிடக்கும் தீய உணர்வுகளாகும். வெறுப்பு ஏற்படும்போதும், பழி வாங்கும்போதும் நம் உடலில் தோன்றும் விஷம் நம்மை சிறிது சிறிதாக கொல்வதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆழமாக புதைந்த வெறுப்பினால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும், படபடப்பு, வயிற்றுப்புண், நரம்புத் தளர்ச்சி, இதய நோய்கள் போன்றவை அடக்க முடியாதகோபம், பழிவாங்கும் வெறி போன்றவற்றால் தூண்டப்படுகின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
பழ வாங்கும் உணர்ச்சியால் நாம் நமது வேலை செய்யும் திறனை இழந்து, பழி வாங்குதலிலேயே காலத்தையும், வாழ்வையும் வீணாக்கி விடுகிறோம். பழிவாங்குவதால் உறவுகளும் பாதிக்கும். ஒரு குடும்பச் சண்டை தந்தையிடமிருந்து மகனுக்கும், அவனிடம் இருந்து அவனது மகனுக்கும் பரவுகிறது. கொஞ்சம் மிச்சமிருக்கும் நல்ல எண்ணத்தையும் இந்த பழிவாங்கும் எண்ணம் அழித்து விடுகிறது. ஆழ்ந்து யோசித்தால் பழி வாங்குவது என்பது நமது தகுதியிலிருந்து கீழிறங்கும் செயல் என்பது புரியும். உயர்ந்த லட்சியங்கள் உடையவர்கள் பழி வாங்குவதில்லை.
கடவுளும், நம்மால் காயம்பட்டவர்களும் நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் நாம் மட்டும், யாரையும், எதையும் மன்னிக்கத் தயாராக இல்லை. இப்படி செல்படுவதால் நமக்கு தீமையே வந்து சேரும்.
உலகத்தில் எதைச் சேர்த்தாலும் வன்மத்தையும், பழிச்சொல்லையும் சேர்க்காதீர்கள். அது மற்றவரையும் அழித்து, உங்களையும் அழித்து விடும். மன்னிக்கும் குணம் தொடர்ந்து வரும் வரையே நாம் மனிதனாக இருப்போம். மன்னிக்கும் குணம் பெருக, மனித உறவை மதிக்க வேண்டும். மற்றவரிடம் நல்லதையே தேட வேண்டும். மற்றவர் தெரியாமல் செய்த தவறுகளை கருணையோடு காணப் பழக வேண்டும். இதுவே தொடர்ந்தால் உங்களுக்குள்ளும் ஒரு மகான் வந்து விடுவார்.
மனதில் கேட்க…
1. பிறரை பழிவாங்கும் போது நான் அடையும் பயன் என்ன?
2. மன்னித்தால் எதிரி கூட அடிமையாவான் இது எனக்கு தெரியுமா?
மனதில் பதிக்க…
ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை மன்னியுங்கள் (மத் 18:22)
~அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா