பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்துவிட்டது
திருப்பாடல் 69: 7 – 9, 20 – 21, 30, 32 – 33
மனிதர் மேல் நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பது எவ்வளவோ நலம் என்று இறைவார்த்தை கூறுகிறது. அந்த இறைவார்த்தையை உண்மையாக்குவதுதான் இன்றைய திருப்பாடல். மனிதரை நம்பியதால் ஏற்பட்ட பல்வேறு சிரமங்களை ஆசிரியர் வெளிப்படுத்துகிறார். தாவீது அரசர் மக்களுக்கு பல நன்மைகளைச் செய்தவர். தாவீது அரசர் காலத்தில் தான், இஸ்ரயேல் அரசு வேற்றுநாட்டினர் பொறாமைப்படக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய அரசாக வளர்ந்தது. அந்த அளவுக்கு, ஆண்டவர் தாவீது வழியாக இஸ்ரயேல் மக்களை உயர்த்தினார். இஸ்ரயேல் மக்களும் பெருமைப்படக்கூடிய அளவுக்கு, வேற்றுநாட்டார் மத்தியில், தாவீது அவர்கள ஆட்சி செய்தார். ஆனால், மக்கள் தாவீதைப்பழித்துப்பேசினர். மன உளைச்சலை உண்டாக்கினர். அதைத்தான் இங்கே வெளிப்படுத்துகிறார்.
தாவீது தன்னை நீதிமானாகக் காட்டிக்கொள்ளவில்லை. தான் தவறே செய்யவில்லை என்றும் கூறவில்லை. கடவுள் முன்னிலையில் தன்னை பாவி என்று காட்டிக்கொள்கிறார். தன்னுடைய பாவங்களை அவர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால், இவ்வளவு பழிச்சொற்களுக்கு தான், தகுதியில்லை என்பது அவரின் வாதம். இவையனைத்திற்கும் காரணம், அவருடைய எதிரிகள் அவர் மீது கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியும், பொறாமையும் தான். எனவே, தன்னை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்கு ஆசிரியர் கடவுளிடத்தில் வேண்டுகிறார். வேற்றுநாட்டினரிடமிருந்து அவருடைய வலிமையினால், தாவீது வெற்றி பெற முடியும். ஆனால், கூட இருந்தே தன்னைக்காட்டிக்கொடுக்கிறவர்கள், உடன் இருந்தே தன் சாவிற்காக ஏங்குபவர்களை, கடவுள் ஒருவர் தான் அடையாளம் காண முடியும், தண்டிக்க முடியும் என்று தாவீது நம்புகிறார். அந்த நம்பிக்கையை இநத பாடலில் வேண்டுதலாக வெளிப்படுத்துகிறார்.
இன்றைக்கு நாமும் கூட, பொறாமை எண்ணத்தோடு, காழ்ப்புணர்ச்சியோடு மற்றவர்களுக்கு கெடுதல் செய்கிறோம். ”தான்” என்கிற அகம்பாவம் பல வேளைகளில், நாம் பல தவறுகளைச் செய்வதற்கு அடித்தளமாக அமைந்துவிடுகிறது. இத்தகைய தவறான எண்ணங்களிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டி இந்த திருப்பாடலை தியானிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்