பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது
திருப்பாடல் 51: 1 – 2, 10 – 11, 16 – 17.
இஸ்ரயேல் மக்கள் வாழ்வில், கடவுளுக்கு பலி செலுத்துவது என்பது மிக மிக முக்கியமான ஒன்று. அதற்கு அதிக அளவில் முக்கியத்துவத்தைக் கொடுத்தார்கள். லேவியர் புத்தககத்தில் நாம் வாசித்துப் பார்த்தால் பலி செலுத்துவது பற்றிய விளக்கங்களை நாம் தெளிவாகப் பார்க்கலாம். எதையெல்லாம் பலி செலுத்த வேண்டும்? எப்படி பலி செலுத்த வேண்டும்? என்று பல ஒழுங்குமுறைகளை இஸ்ரயேல் மக்கள், லேவியர் நூலைப் பின்பற்றி கடைப்பிடித்தார்கள். ஆக, பலி செலுத்துவது இஸ்ரயேல் மக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்று என்பது தான், இங்கு நாம் அறிய வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
எதற்காக பலி செலுத்தப்படுகிறது? கடவுள் நம்மிடமிருந்து பலி வேண்டுவதில்லை. அவருக்கு அது அவசியமுமில்லை. நாம் புதிதாக பலி என்று ஒன்றை செலுத்திவிட முடியாது. ஏனென்றால், நாம் செலுத்தக்கூடிய காணிக்கையும் அவருடைய அருளினால் தான் பெற்றிருக்கிறோம். பின் ஏன் பலி செலுத்த வேண்டும்? பலி செலுத்துவதன் உண்மையான நோக்கம், கடவுள் மட்டில் நாம் வைத்திருக்கிற அன்பின் வெளிப்பாடாக, நமது உள்ளத்தில் மண்டிக்கிடக்கிற அன்பை வெளிப்படுத்தும் அடையாளமாகத்தான் செலுத்துகிறோம். ஆனால், இந்த உண்மையான அர்த்தம் இப்போது செலுத்தப்படுகிற பலியில் காணப்படுவது கிடையாது. பலி செலுத்தினால் கடவுளைத் திருப்திப்படுத்தி விடலாம், என்ன தவறு செய்தாலும், தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்று, குறுகிய மனப்பான்மையோடு, இலாப நோக்கோடு செலுத்தப்படுகிற சடங்கு தான், நாம் வாழக்கூடிய உலகத்தில் மண்டிக்கிடக்கிறது. இப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருக்கிறவர்களுக்கு கொடுக்கப்படுகிற சாட்டையடி தான், இன்றைக்கு நாம் சிந்திக்கிற வார்த்தைகள். உண்மையான மனமாற்றத்தினால் மட்டும் தான், நாம் கடவுளின் மன்னிப்பையும், அன்பையும், இரக்கத்தையும் பெற்றுக்கொள்ள முடியுமே தவிர, வேறு எதைக்கொண்டும் நாம் கடவுளை மகிழ்ச்சிப்படுத்த முடியாது.
எதையும் இலாப நோக்கோடு சிந்திக்கிற நாம் வாழக்கூடிய உலகம், ஆன்மீகத்தையும் வியாபார நோக்கோடு தான், நம்மைப் பார்க்க வைப்பதற்கு முயன்று வருகிறது. இது தவறான கண்ணோட்டம். கடவுள் விரும்புவது நொறுங்கிய உள்ளத்தைத்தான். வெறும் கண்துடைப்பிற்காகச் செலுத்தப்படும் பலிகளை அல்ல என்பதை, நாம் உணர வேண்டும்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்