பலன் தரும் வாழ்வு
வாழ்வின் வெற்றிக்கு எது சரியான வழி? என்பதற்கான உதாரணம் தான் இன்றைய நற்செய்தி வாசகம். விதைப்பவர் நிலத்தில் அறுபது மடங்கு மற்றும் நூறு மடங்கு பலன் கொடுக்கும் நிலத்தைப் பார்ப்போம். அங்கே விழுந்த விதைகளை, அந்த நிலமானது தனக்குள்ளாக ஏற்றுக்கொள்கிறது. தனது முழு ஆற்றலையும், சக்தியையும், அந்த விதை வளர்வதற்கு கொடுக்கிறது. எப்படியும் அந்த விதை, அதற்கான பலனைக் கொடுக்க வேண்டும் என்று தன்னையே அந்த நிலம் தியாகமாகக் கொடுக்கிறது. விதை விதைத்து பலன் தருகிறபோது, அந்த நிலத்தை யாரும் கண்டுகொள்வதில்லை. அறுவடையிலும், அதன் மகிழ்ச்சியிலும் தான், முழுமையான கவனம் கொண்டிருப்பார்கள். ஆனால், அதனைப்பற்றி அந்த விதை கவலைப்படாமல், தாழ்ச்சியோடு இருக்கிறது.
நமது உள்ளம் அப்படிப்பட்ட அந்த நிலமாக இருக்க வேண்டும். பல நல்ல சிந்தனைகள் நமக்குள்ளாக விதைக்கப்படுகிறது. அது எங்கிருந்து வந்தாலும், திறந்த உள்ளத்தோடு நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்கிறபோது, அது நமக்குள்ளாக ஆழமாக வேரூன்ற தொடங்குகிறது. அதற்கு நம்மையே முழுமையாக கையளிக்க வேண்டும். நமக்குள்ளாக விதைக்கப்படுகிற சிந்தனைகள், நமக்குள்ளேயே மூழ்கிவிடாமல், தொடர்ந்து அது நம்மில் பலன் தர நாம் முயற்சி எடுக்க வேண்டும். நம்மையே அதற்கு முழுவதுமாக ஒப்படைக்க வேண்டும். இறுதியில் நமது வாழ்வு பல மடங்கு பலன் தருவதை நம்மால் பார்க்க முடியும்.
இன்றைக்கு நல்ல சிந்தனைகளையோ, நல்ல கருத்துக்களையே நாம் திறந்த உள்ளத்தோடு உள்வாங்குவதில்லை. மேலோட்டமாக கேட்டுவிட்டு சென்று விடுகிறோம். அதனால், நம்மால் எதிர்பார்க்கிற பலனைக் கொடுக்க முடிவதில்லை. நமது வாழ்க்கை பலன் தர வேண்டும். அதற்கு நாம் பல சிந்தனைகளுக்கு, திறந்த உள்ளத்தோடு செவிமடுத்து, உள்வாங்கி, பலன்தர முயற்சி எடுப்போம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்