”பயணத்திற்கு…எதையும் எடுத்துக்கொண்டு போக வேண்டாம்” (லூக்கா 9:3)
பயணம் போவது சில வேளைகளில் மகிழ்ச்சியான ஓர் அனுபவமாக இருக்கும்; வேறு சில வேளைகளில் அது துயரமானதாகவும் இருக்கலாம். எத்தகைய பயணமாக இருந்தாலும் தாங்க முடியாத அளவுக்கு சுமைகளைக் கட்டிச் சென்றால் அந்தப் பயணம் இனிமையாக இராது. சுமையைக் கவனிப்பதிலேயே சக்தியெல்லாம் வீணாகிப் போனால் பயணத்தின் நோக்கம் நிறைவேறியது எனக் கூற முடியுமா? வாழ்க்கை முழுவதுமே ஒரு பயணம் எனலாம். இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்லாத போதும் பெரிய சுமைகளை நாம் நம்மோடு கொண்டுபோவதாக இருந்தால் அச்சுமைகள் நம்மை அழுத்திவிடக் கூடும். எனவே, ”கைத்தடி, பை, உணவு, பணம்” போன்ற பொருள்களைப் பயணத்திற்கென எடுத்துச் செல்ல வேண்டாம் (காண்க: லூக்கா 9:3) என்று இயேசு பன்னிருவருக்குக் கூறிய சொற்கள் நமக்கும் பொருந்தும். நம் உடைமைகளே நம் வாழ்க்கையை நிறைத்துவிட்டால் கடவுளுக்கு அங்கே இடமில்லாமல் போகும். அதே நேரத்தில் நம் வாழ்க்கை முற்றிலும் வெறுமையாக மாறிவிட்டால் நாம் கடவுளைப் பழிக்கத் தொடங்கிவிடுவோம்.
ஆக, அளவுக்கு மீறிய செல்வமும் ஆபத்து, தேவைக்கு மிஞ்சிய வறுமையும் ஏற்கத் தகாதது எனலாம். விவிலிய நூலாகிய ”நீதிமொழிகள்” கூறுவதுபோல, ”எனக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்” (நீமொ 30:8) என நாம் மன நிறைவு கொண்டிருப்பதே உயர்ந்த அறிவு.
மன்றாட்டு
இறைவா, உலகம் வழங்குகின்ற செல்வத்தில் நம்பிக்கை கொள்ளாமல் உம் நிறைவிலிருந்து நாங்கள் நிறைவுபெற எங்களுக்கு அருள்தாரும்.
— அருட்திரு பவுல் லியோன் வறுவேல்