”பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள்” (லூக்கா 11:42)
சில கிறிஸ்தவ சபைகளில் ”பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கின்ற” வழக்கம் உண்டு. இதற்கு அடிப்படை லேவியர் நூலில் உள்ளது: ”நிலத்தின் தானியங்களிலும், மரங்களின் கனிகளிலும் பத்திலொன்று ஆண்டவருக்குரியது” (லேவி 27:30). கடவுளிடமிருந்து நாம் அனைத்தையுமே கொடையாகப் பெறுகின்றோம். எனவே, கடவுளுக்கென நாம் ஒரு பகுதியைக் காணிக்கையாகக் கொடுப்பது பொருத்தமே. இயேசு அக்காலத்தில் நிலவிய இப்பழக்கத்தைக் கண்டித்தார் என்பதற்கில்லை. மாறாக, கடவுளுக்குக் காணிக்கை கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு, உண்மையிலேயே ஏழைகளைப் பற்றிக் கவலைப்படாமல், கடவுளின் அன்பில் நிலைத்திராமல் வாழ்வது முன்னுக்குப்பின்முரணாக உள்ளது என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார் (லூக்கா 11:42).
கடவுளுக்குக் கொடுக்கப்படுகின்ற காணிக்கை கடவுளின் புகழுக்காகவும், கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்ட மனிதரின் நலனுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்வர். எனினும், பத்திலொரு பங்கைக் காணிக்கையாக்க வேண்டும் என்று மக்களைக் கட்டாயப்படுத்துவது சரியல்ல. கட்டாயத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது உண்மையான கொடை என்று சொல்ல முடியாது. உளமார உவந்து வழங்குவதே உண்மையான கொடை, அன்பளிப்பு. கடவுளிடமிருந்து நாம் கொடையாகப் பெற்றவற்றை மக்களின் நலனுக்காகக் கொடுக்கும்போது கடவுளுக்கே நாம் புகழ் செலுத்துகிறோம். மனிதரின் பொருள்கொடை கடவுளுக்குத் தேவையல்ல; ஆனால், நம் உள்ளத்தில் அவரை உண்மையாக ஏற்று வழிபடுகின்ற செயலே நாம் அவருக்கு அளிக்கின்ற மேலான கொடை. அதுபோலவே, கடவுளின் அன்பைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதும் கடவுளுக்கு விருப்பமானதாகும். எனவே, ”நீதியையும் கடவுளின் அன்பையும் கடைப்பிடிக்க” நாம் அழைக்கப்படுகிறோம் (காண்க: லூக்கா 11:42)
சிந்தனை
இறைவா, பொருளை அல்ல எங்கள் இதயத்தையே நீர் கேட்கிறீர் என உணர்ந்து எங்களையே உமக்குக் கையளிக்க அருள்தாரும்.
~அருட்திரு பவுல் லியோன் வறுவேல்