பதவிக்கான ஆசை உங்களை விரட்டுகிறதா?

யோவான் 6:1-15

திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் (போப் பெனடிக்ட் XVI), உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருந்தவர் ஆவார். இவர் 1927 ஏப்ரல் திங்கள் 16 ஆம் நாள் பவேரியா, ஜெர்மனியில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர் என்பதாகும். 2005 ஏப்ரல் திங்கள் 19 ஆம் நாள் தனது 78 அகவையில் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். இவர் மூனிச் உயர் மறைமாவட்டத்தின் கர்தினால்-பேராயராக செயல்பட்டு வந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 264 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார். இவர் தன் வாழ்வில் செய்த ஒரு சிறப்பான செயல் இன்றும் நம் மனக்கண் முன் நிற்கின்றது. ஒருபோதும் நாம் அதை மறக்க முடியாது. அது நம் அனைவருக்கான அழியா பாடம், அழகான பாடம்.

2013 பிப்ரவரி மாதம் 28ம் தேதி திருத்தந்தை பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை வெளியிட்டு அறிக்கை ஒன்றை 11 பிப்ரவரி 2013 அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வெளியிட்டார். முதுமை காரணமாக திருத்தந்தைக்குரிய பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியாத நிலையில் இம்முடிவை எடுத்துள்ளதாகவும், 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் கர்தினால்கள் அவையால் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட இப்பொறுப்பிலிருந்து பிப்ரவரி 28ம் தேதி உரோம் நேரம் இரவு 8 மணியிலிருந்து பதவி விலகுவதாக அவ்வறிக்கையில் கூறியிருந்தார். இவர் நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் தனது பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியாத நிலையில் பணி துறப்பு முடிவை எடுத்தார். திருத்தந்தையின் இந்த முடிவு அவருக்கும் பதவி ஆசைக்கும் அதிக தூரம் இருப்பதை நமக்கு இனிதே எடுத்துக்காட்டுகிறது. பதவிக்காகவே வாழ்ந்துக்கொண்டிருக்கிற ஓடிக்கொண்டிருக்கிற நம்மில் பலர் இவரைப் பார்த்து படித்து பண்பான வாழ்விலுக்குள் கடந்து சென்றால் அதுவே மிகவும் சிறப்பாக இருக்கும்.

பதவிக்கான ஆசை நமக்குள் வரும்போதும், பிறர் பதவிக்கான ஆசையை நமக்குள் தூண்டும் போதும் நாம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக கற்றுத்தருகிறார்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும், இரண்டு மீன்களையும் வைத்து ஐயாயிரம் பேருக்கு அதிசய உணவு அளிக்கிறார். அதைப் பார்த்த மக்கள் கூட்டம் உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் இவரே என சொல்லி அவரை அரசராக்க மிகவும் ஆசைப்படுவதை எண்ணிய இயேசு அவ்விடத்திலிருந்து மிகவும் விவேகமாய் கடந்து செல்கிறார். மாபெரும் அதிசயத்தை தன் வழியாய் தந்தை வெளிப்படுத்தியதற்காக ஜெபத்தில் கரம் குவித்து நன்றி சொல்ல மலைக்குச் செல்கிறார்.

பதவி ஆசை நமக்குள் வரும்போது பல அபாயங்கள் நமக்கு நடப்பது உண்டு. நம்மை மனிதர்களாக நடமாட விடாமல் வெறியர்களாக மாற்றி நம்மை வேடிக்கைப் பார்க்கிறது. பதவி ஆசையினால் விளையும் பக்கவிளைவுகள் இரண்டு.

பக்கவிளைவு 1: ஆண்டவரை விரட்டுகிறது
சான்றோர்கள் அருமையாக சொல்வார்கள், “ஆசையை தொட்டவன் ஆண்டவரை விட்டவன்”. இது நூறு சதவிகிதம் முலாம் பூசப்படாத உண்மை. பதவி ஆசை வர வர பணம் தான் கடவுளாகத் தெரிகிறது. கடவுள் காணாமல் போகிறார். ஆகவே பதவி ஆசை வந்தவர்கள் ஊதாரி மைந்தர்களாக திரிகிறார்கள். இவர்களிடம் மனிதநேயம், மக்கள் மய்யம் இவைகள் இல்லாமல் போகின்றது. ஆசையின் உச்சக்கட்டத்திற்கே இவர்கள் செல்வதால் வாழ்வில் மனவிரக்தியையே அனுபவிக்கிறார்கள்.

பக்கவிளைவு 2: பாவச்செயல்களுக்கு காரணமாகிறது
இப்போது பதவிக்காக ஆசைப்படுகிற பலர் பதவிக்காக பிறருடைய உயிரையும் எடுப்பதற்கு அஞ்சுவதில்லை. கூலிப்படையின் மூலம் மனசாட்சி இல்லாமல் கடவுளுக்கு அஞ்சாமல் இந்த அநீத செயலை அவர்கள் செய்வதும் இந்த பதவி ஆசையினாலே.

இந்த இரண்டு பக்கவிளைவுகளையும் சந்திக்கிற மனிதர்கள் இவ்வுலகில் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ்வதில்லை. பதவி ஆசை வருகின்ற போது நாம் அதை எப்படி கையாள வேண்டும், அதிலிருந்து நம்மை எப்படி மீட்டெடுக்க வேண்டும் என்பதை நாம் அறிவது மிகவும் அவசியமானது. இரண்டு நிலைகளில் நாம் அதை செய்யலாம்.

1. பிறருடைய சோதனைக்குட்பட வேண்டாம்
பதவிக்கான ஆசையை தூண்டும் நண்பர்கள் நமக்கு இருந்தால் அதைக் குறித்து மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். பெரும்பாலும் நமக்கான பதவி ஆசையை தூண்டுவது நண்பர்களே. அவர்கள் தூண்டி விடுவார்கள். ஆனால் நாம் பாதிக்கப்படும் போது அவர்களை நம் பக்கத்தில் பார்க்கவே முடியாது. ஆகவே அந்த சோதனையில் உட்படாதிருப்பது உன்னதமான வாழ்க்கைக்கு அழைத்து செல்லும்.

2. ஜெபத்தில் ஈடுபட வேண்டும்
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை மக்கள் அரசராக்க வேண்டும் என்று வந்த போது அவர்களிடமிருந்து தப்பித்து அவர் விவேகமாக தன் தந்தையிடம் சென்றார். தந்தையோடு தனியாக பயணித்தார். பதவி ஆசை வரும்போது ஓட வேண்டும். தப்பித்து ஓட வேண்டும். ஆண்டவர் இயேசுவிடம் ஓட வேண்டும். தனிமையிலே அவரோடிருந்து ஞானமும், விவேகமும் பெற்று வாழ்வை கொண்டாடுவதற்காக ஆசீரையும், அருளையும், ஆற்றலையும் பெற வேண்டும்.

அன்புமக்களே! பதவி ஆசை நமக்கு எதற்கு? அதனால் வரும் பாதிப்புக்களை தெளிவாக பார்த்த நாம் அதன் பக்கம் தலை வைத்து படுக்கலாமா? பதவி ஆசையை விடுத்து இறைவன் மீது ஆசை கொள்வோம். இறைவன் மீதுள்ள கொள்கிற ஆசை பல அவசிமற்ற ஆசைகளை விரட்டுகிறது. இறைவனை விரும்புவோம். இலவசமாக நிலையான இன்பங்களை இன்றே பெற்று தொடா்ந்து நம் வாழ்வை அனுபவிப்போம்.

மனதில் கேட்க…
• பதவி ஆசையினால் விளைவுகள் பக்கவிளைவுகள் வேண்டாமல்லவா?
• பதவி ஆசையை விட இறைவன்ஆசைக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கலாமா?

மனதில் பதிக்க…
இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள் (கொலோ 3:2)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.