பணி செய்யும் தலைமை !
தலைமைப் பண்பைப் பற்றிய இயேசுவின் போதனை இருபது நுhற்றாண்டுகளுக்குப் பின்பும் புரட்சியானதாகவும், தேவையானதாகவும் இருப்பது நமக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பைத் தருகிறது. நமது உலகம் பல்வேறு விதமான தலைவர்களைப் பார்த்திருக்கிறது: சர்வாதிகாரிகள், ஜனநாயகவாதிகள், வழிகாட்டிகள், மாதிரிகள்… என எத்தனையோ பேர். ஆனால், இயேசு அறிமுகப்படுத்திய பணி செய்யும் தலைமைப் பண்புதான் இன்று வரை உலக வளர்ச்சிக்கும், அமைதிக்கும் தேவையானதாக இருக்கிறது. தலைவர்கள் பிறரை அடக்கி, ஆள்பவர்கள் அல்ல, மாறாக பிறருக்குப் பணி செய்து, தம்மையே பலியாக்குபவர்கள் என்னும் இயேசுவின் பார்வை இன்றும் புதிதாக, புரட்சிகரமானதாகவே இருக்கிறது. ஆனால், இயேசு அதை வாழ்ந்து காட்டினார். திருச்சபையின் வரலாற்றில் இயேசுவின் சீடர்களும் அதை வாழ்ந்து காட்டினர். ஆனாலும், முழமையாக அவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.
இதோ, இன்றைய நற்செய்தி வாசகத்தின் மூலமாக இயேசு மீண்டும் இந்த அழைப்பை நமக்குத் தருகிறார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 35-45
அக்காலத்தில் செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகிச் சென்று அவரிடம், “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்கள். அவர் அவர்களிடம், “நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, “நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்” என்று வேண்டினர். இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “இயலும்” என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, “நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” என்று கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபு மீதும் யோவான் மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், “பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.
~
நமது இல்லத்தில், அலுவலகத்தில், நண்பர்கள் மத்தியில் பணி செய்யும் தலைவர்களாக நம் ஒவ்வொருவருக்குமே வாய்ப்பும், அழைப்பும் கிடைக்கிறது. கணவர்கள் தம் மனைவியருக்குப் பணி செய்து தலைவர்களாய் வாழுங்கள். பெற்றோர் தம் பிள்ளைகளுக்குப் பணி செய்து தம் தலைமையை நிலைநாட்டட்டும். தலைமைப் பொறுப்புகளில் இருப்போர் தங்களின்கீழ் பணியாற்றுபவர்களுக்கு மனித உரிமைகளும், மாண்பும் வழங்கி தம் தலைமைப் பொறுப்பை நிறைவு செய்யட்டும். இதுவே இயேசுவின் தலைமைப் பண்பு. இதுவே இன்றைய தேவை.
மன்றாடுவோம்: பணி புரியவே வந்தேன் என்று மொழிந்த இயேசுவே, இன்றைய நற்செய்திக்காக உமக்கு நன்றி. பல்வேறு விதங்களில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் நாங்கள், உமது வார்த்தையின்படியே பிறருக்குத் தொண்டாற்றி, அதன் வழியாக எங்கள் தலைமைப் பண்பை செயல்படுத்த எங்களுக்கு உமது ஞானத்தையும். ஆவியின் ஆற்றலையும் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
–அருள்தந்தை குமார்ராஜா