பணிவிடை செய்யவே வந்தேன்
தங்களுக்குள்ளாக யார் பெரியவர்? என்று சீடர்கள் சண்டையிட்டுக் கொள்வது, இன்னும் அவர்கள் இயேசுவையும், அவரது பணிவாழ்வையும், அவரது பணியின் நோக்கத்தையும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்பதையும், தங்களது வாழ்வின் முக்கியத்துவத்தை அவர்கள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. எதற்காக இந்த சண்டை எழுந்தது? தொடக்கத்தில் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்ட சீடர்கள், திடீரென்று தங்களுக்குள்ளாக ஏன் சண்டையிட்டுக்கொள்கின்றனர்?
இயேசுவை பல சீடர்கள் பின்தொடர்ந்தார்கள். அவர்களுள் திருத்தூதர்கள் முதன்மையானவர்களாக இருந்தனர். இயேசுவிற்கு பணிவிடை செய்வதற்கு பெண் சீடர்களும் உடனிருந்தார்கள். இயேசு மூன்று சீடர்களை எப்போதுமே, உடன் அழைத்துச் செல்வதையும் நாம் நற்செய்தியின் ஆங்காங்கே பார்க்கலாம். பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூன்று பேர் தான், அந்த சீடர்கள். அவர்களுக்கு இயேசு முக்கியத்துவம் கொடுக்கிறபோது, மற்றவர்கள் பொறாமைப்படுவதற்கும், அந்த மூன்றுபேரும் பெருமைப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இயேசு அவர்களுக்குள்ளாக யார் பெரியவர்? என்ற கேள்விக்கே இடமில்லை, என்பதை ஆணித்தரமாக வலியுறுத்திக்கூறுகிறார். யார் அதிகமாக பணிவிடை செய்கிறார்களோ, யார் தங்களை தாழ்த்திக் கொள்வதில் நிறைவு காண்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர்கள் என்று அவர்களுக்கு தன் சொல்லாலும், பின் செயலாலும் வலியுறுத்திக்கூறுகிறார்.
நாம் நமது வாழ்வில் பணிவிடை செய்கிறவர்களுக்கு மதிப்பு கொடுக்கிறோமா? அல்லது பணிவிடையை எதிர்பார்க்கிறவர்களுக்கு மதிப்பு கொடுக்கிறோமா? பதவியில் இருக்கிறவர்களுக்கும், அதிகாரம் மிகுந்தவர்களுக்கும் தான் நாம் அதிகமாக மதிப்பும், மரியாதையும் கொடுக்கிறோம். இந்த உலக மதிப்பீட்டை கடந்து வாழ முயற்சி செய்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்