பணிப்பொறுப்பு
பெரிய ஏரோது தனது காலத்தில், அனைவரையும் சந்தேகிக்கிறவனாகவே வாழ்ந்து இறந்தான். தனது மனைவியரை மட்டுமல்ல, தனது பிள்ளைகளையும் அவன் கொன்றொழித்தான். தனது அரசிற்கு எதிராக யார் தடையாக இருப்பதாகத்தோன்றினாலும், அவர்களை கொலை செய்தான். பெரிய ஏரோதிற்குப்பிறகு அவன் ஆட்சி செய்த பகுதிகள் மூன்று நிலப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அவனுடைய மூன்று பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவன் தான் குறுநில மன்னன் என்று நற்செய்தியாளரால் சொல்லப்படுகிற ஏரோது அரசன். இவன் ஏரோது அந்திபாஸ் என்று அழைக்கப்பட்டான். கலிலேயா மற்றும் பெரியா பகுதிகளை இவன் ஆட்சி செய்து வந்தான். இயேசு கலிலேயர் என்பதால், இயேசுவினுடைய அரசரும் இந்த ஏரோதுதான். எனவே தான், பிலாத்து முதலில் இயேசுவை, முதலில் இவனிடம் அனுப்பினான்.
”இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன். பிணிகளைப்போக்குவேன். மூன்றாம் நாளில் என் பணி நிறைவுறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்” என்று லூக்கா 13: 32ல் சொல்வது இவனைப்பற்றித்தான். ஏனெனில், இந்த ஏரோது தந்திரக்காரன். எனவே, நரியோடு ஒப்பிடப்படுகிறான். சீடர்களின் போதனை உண்மையிலே மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது, ஏரோதுவின் பயத்திலும் கலக்கத்திலும் வெளிப்படுத்தப்படுகிறது. பதவியைத் தக்கவைப்பதைப்பற்றித்தான் ஏரோது யோசித்துக்கொண்டிருந்தானே தவிர, தனது பதவியின் மூலம் மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்யலாம் என்பதைப்பற்றி அவன் கவலைப்பட்டதாகவேத் தெரியவில்லை. அதுதான் அவன் செய்த மிகப்பெரிய தவறு. நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பதவி, அதிகாரங்கள் நமக்கு மதிப்பைத் தந்தாலும், அது நம்மேல் சுமத்தப்பட்ட பொறுப்பு. அதை வைத்து, மக்களுடைய வாழ்வில் ஒளியேற்ற நாம் முனைப்போடு செயல்பட இந்த வாசகம் அழைக்கிறது.
இயேசு தான் கொடுத்த போதனைகளை, கற்றுக்கொடுத்த பாடங்களைசீடர்கள் தங்களோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பவில்லை. மாறாக, மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்று அவர்களை அனுப்பினார். அதேபோல, நாம் பெற்றுக்கொண்டிருக்கிற ஒவ்வொரு கொடைகளும், மற்றவர்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் செலவழிக்கப்பட வேண்டும்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்