பட்டியலைப் பார்த்தீர்களா?
லூக்கா 6:20-26
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
இன்றைய நற்செய்தி வாசக்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு பட்டியலை வெளியிடுகிறார். என்ன அந்த பட்டியல்? அதுதான் பேற்பெற்றோர் யார் என்பதும் கேடுற்றோர் யார் என்பதும் ஆகும். நமக்கு அந்த பட்டியலில் எந்த இடம் என்பதை கவனமாய் கண்டுபிடிக்க இன்றைய வழிபாடு நம்மை அழைக்கின்றது.
1. பரிசு வரும்
ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் மலைப்பொழிவில் பேறுபெற்றோருக்கான பரிசுகளை வழங்குகிறார். ஏழைகளுக்கு விண்ணரசு என்ற பரிசு கிடைக்கும். பட்டினியாய் இருப்போருக்கு பசி தீா்ந்து நிறைவு என்ற பரிசு கிடைக்கும். அழுது கொண்டிருப்போர் சிரிப்பு என்ற பரிசை பெறுவர் என ஆண்டவர் இயேசு பேறுபெற்றோருக்கான பரிசுகளை அறிவித்துக்கொண்டே சொல்கிறார்.
2. பாதிப்பு வரும்
தன் செல்வத்தை தன்னோடு மட்டுமே வைத்து சுயநலமாக வாழும் செல்வருக்கு பாதிப்பு வரும். தன்னுடைய உணவை தன் அருகிலிருப்பவருக்கு கொடுக்காமல் தன் வயிற்றை மட்டுமே நிரப்புவோருக்கு பாதிப்பு வரும். அடுத்தவர் துன்பப்படுவதைக் கண்டு சிரிப்போருக்கு பயங்கரமான பாதிப்பு வரும் என ஆண்டவர் இயேசு கேடுற்றோருக்கான பாதிப்புகளை அறிவித்துக்கொண்டே சொல்கிறார்.
மனதில் கேட்க…
1. நான் எந்த இடத்தில் இருக்கிறேன் – பேறுபெற்றவனா அல்லது கேடுற்றவனா?
2. ஆண்டவரிடமிருந்து நான் இதுவரை பெற்றிருக்கின்ற பரிசுகள் என்னென்ன?
மனதில் பதிக்க…
நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர் (திபா 1:1)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா