படைப்புக்களின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகிறது
திருப்பாடல் 19: 2 – 3, 4 – 5
”படைப்புக்களின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகிறது”
கடவுள் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்? கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் என்ன? இவை போன்ற கேள்விகள், மனித உள்ளத்தில் அடிக்கடி எழக்கூடியவை. ஏனெனில், மனிதர்களாகிய நாம் எப்போதுமே, காரணங்களை, விளக்கங்களைத் தேடுகிறவர்களாக இருக்கிறோம். இன்றைய திருப்பாடல் கடவுளின் இருப்பை, அவருடைய மாட்சிமையை, மகிமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
இந்த திருப்பாடலில் வரக்கூடிய முதல் நான்கு இறைவார்த்தைகளுமே, கடவுளின் வல்லமையை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. நாம் காலை விழித்தெழுவதிலிருந்து பார்க்கக்கூடிய எல்லாவற்றிலும், கடவுளின் மகிமையைக் கண்டுனரலாம். காலையில் எழக்கூடிய சூரியன், எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிற மேகக்கூட்டங்கள், இரவு, பகல் மாற்றம் – இவையனைத்துமே தங்களைப் படைத்தவர் ஒருவர் இருக்கின்றார் என்பதை, வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. நாளை சூரியன் தோன்றுமா? தோன்றும் என்கிற நம்பிக்கையை, இயற்கை நமக்கு தந்துகொண்டே இருக்கிறது. அவையனைத்துமே கடவுளின் வேலைப்பாடுகள் தான். கடவுளை நாம் வேறு எங்கேயும் தேட வேண்டாம்? சுற்றி இருக்கிற இயற்கையைப் பார்த்தாலே போதும். கடவுளின் இருப்பை அறிந்து கொள்ளலாம்.
இறைவனின் இருப்பு நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ்வதற்கான ஓர் அழைப்பு. அது நாம் எப்போதும் இயற்கையின்பால் அன்ப கொண்டிருக்க வேண்டும் என்பதை நமக்கு வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. கடவுளின் அன்பையும், அவரது இனிமையையும், இயற்கையிலிருந்து நாம் சுவைத்துணர்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்