படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது
September 2022 | Bible Quiz – 93 ( I Thessalonians ) – [ in English ]
திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4
கடவுளின் மாட்சிமையை, மேன்மையை இயற்கை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறது என்பதை, இந்த திருப்பாடல் சுட்டிக்காட்டுகிறது. படைப்பை நாம் உன்னிப்பாக கவனிக்கிறபோது, பலவற்றை இந்த படைப்புகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். அதற்கு ஒரு மதிப்பு இருக்கிறது. அது ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று, கடவுளால் படைக்கப்பட்டிருந்தால், அது எல்லா நாட்களிலும், எல்லா காலங்களிலும் அப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. இரவிற்கு பின் பகல் என்பது கடவுள் வகுத்த நியதி. இன்று வரை, அதில் மாற்றம் இல்லை. படைப்பு என்றால், இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இயற்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
மனிதனும் கடவுளின் படைப்பு தான். ஆனால், மனிதன் மட்டும் ஏன் இப்படி இருக்கிறான்? என்பதுதான் ஆசிரியரின் ஆதங்கமாக இருக்கிறது. மனிதன் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் இயங்க வேண்டும் என்று கடவுள் எல்லையை வகுத்திருக்கிறார். ஆனால், மனிதன் அப்படி இல்லை. அதனை கடந்து சென்று விடுகிறான். கடவுள் வகுத்த எல்லையை மீறிவிட்டான். இன்றைக்கு படைப்புக்கள் கடவுளின் பெயரைப் புகழ்கிறது, மகிமை சேர்க்கிறது என்றால், அதற்கு காரணம் அவை கடவுளின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து நடக்கின்றன. ஆனால், மனிதன் கடவுளின் சொல்லை மீறி விட்டான். கீழ்ப்படிய மறுத்து விட்டான். எனவே, கடவுளை அவனால் புகழ முடியவில்லை.
படைப்புக்களை பின்பற்றி, கடவுளை மகிமைப்படுத்த வேண்டும் என்பதுதான் ஆசிரியரின் நோக்கமாக இருக்கிறது. அதைத்தான் அறிவுரையாக நமக்கும் சொல்கிறார். கடவுளின் திருப்பெயரை மகிமைப்படுத்துகிற படைப்புக்களாக மானிட சமுதாயம் உருவாக, இந்த திருப்பாடலை தியானிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்