பகை முற்றுகிறது
(யோவான் 07: 1-2, 10, 25 – 30)
யோவான் ஐந்தாம் பிரிவில் இயேசு ஓய்வு நாளில் குணப்படுத்தியதால், எழும்பிய எதிர்ப்பு அப்படியே தொடர்ந்து, ஆறாம் பிரிவில் இயேசு, “நான் உயிர் தரும் உணவு” என்று கூறியதைக் கேட்டதும் இன்னும் வலுக்கிறது. இன்றைய ஏழாம் பிரிவோ எதிர்ப்பிலேயே தொடங்குகிறது. இந்த எதிர்ப்பு இன்னும் அதிகமாக வலுக்கிறது.
ஓய்வு நாளில் குணம் கொடுத்ததற்கே அவரை எதிர்த்த யூதர்களுக்கு இப்போது அவரின் மீது பழிபோட இன்னும் அதிகக் காரணங்கள் கிடைக்கின்றன.
1. யூதக் கணிப்புப்படி (மாற்கு 14 : 61-63) தன்னை மெசியா, தன்னைக் கடவுளிடமிருந்து வந்தவன் என்று சொல்லும் எவனும் கடவுளைப் பழித்துரைக்கிறான் என நம்பினர்.
2. இதையும் கூறிவிட்டு இயேசு இன்னும் ஒரு படி மேலே சென்று இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூத மக்களைப் பார்;த்து, “நீங்கள் கடவுளை அறியவில்லை, நானோ அவரை அறிவேன்” (யோவான் : 28,29) என்கிறார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருக்கிறது இயேசுவின் வார்த்தை. ஆனால் இயேசுவின் சொற்கள் அனைத்தும் உண்மையை எடுத்துரைக்கின்றன. உண்மைக்குச் சான்று பகர்கின்றன. இந்த உண்மை அவர்களைக் குறிப்பாக அதிகார வர்க்கத்தில் இருந்த யூதர்களைச் சுட்டதால் அவர்கள் இயேசுவைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்கள்.
இயேசுவின் வார்த்தை நம்மை சுடுகிறதா? அல்லது நாம் பட்ட காயங்களுக்குக் கட்டுப் போடுகிறதா? என்பதிலிருந்து நாம் அவர் பக்கமா? அல்லது எதிர்ப்பக்கமா? என்பதைக் கண்டுணர முடியும். இத்தவக்காலத்தில் அவர் பக்கம் நின்று அவரது சிலுவையைத் தாங்க முயற்சிப்போம்.
– திருத்தொண்டர் வளன் அரசு