பகிர்வு வாழ்வு வாழுவோம்
”கற்றது கையளவு, கல்லாதது உலகளவு” – இதனுடைய அர்த்தத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் நாம் கற்றது சிறிதளவு தான். நமக்குத் தெரியாதவை இந்த உலகத்தில் எவ்வளவோ இருக்கிறது. இந்த உண்மையை நாம் உணர்கிறபோதுதான், நமது உண்மைநிலையை அறிந்து கொள்ள முடியும். “எனக்குத் தெரியாதது இந்த உலகத்திலே எதுவும் இல்லை“ என்ற எண்ணம் நமக்கு இருக்குமேயென்றால், அது நமது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். அது நமது வாழ்வு என்னும் பயணத்தில் தடைக்கற்களாக அமைந்துவிடும். அத்தகைய தடைக்கற்களை இன்று சிந்திப்போம்.
1. முதலாவது, நமது வளர்ச்சியை இந்த எண்ணம் தடுத்துவிடும். “எனக்கு எல்லாம் தெரியும்“ என்ற எண்ணம் நமக்குள்ளாக இருப்பது எந்தவிதத்திலும் நம்மை வளரவிடாது. கிணற்றுத்தவளையாகவே நமது வாழ்வு அமைந்துவிடும். நமது அறிவுவளர்ச்சி குறிப்பிட்ட எல்லையைத்தாண்டாது.
2. அடுத்தவருடனான நமது உறவு சீர்குலைந்துவிடும். நமக்கு தெரிந்ததை மற்றவரோடு பகிர்ந்துகொள்வதும், தெரியாததை மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்வதும் உறவு வளர காரணியாக இருக்கும். அடுத்தவர் கருத்தை மதிக்காது, அடுத்தவரைக்குறைவாக மதிப்பிடுவது உறவுக்கு பெரிய அழிவாக இருக்கும்.
கிறிஸ்தவ வாழ்வு என்பது மற்றவரோடு இணைந்த பகிர்வு வாழ்வு. அத்தகைய வாழ்வுக்கு மேற்கண்டவை தடைக்கற்களாக இருக்கிறது. அந்த தடைகளைத் தகர்த்தெறியும்போது, நம்மால் சிறந்த, முன்மாதிரியான கிறிஸ்தவ வாழ்வை வாழ முடியும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்