நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை
திருப்பாடல் 51: 1 – 2, 3 – 4, 16 – 17 – நொறுங்கிய உள்ளம் என்பது என்ன? ஒருவர் செய்த நன்மைகளை மறந்து, அவருக்கு எதிராகச் செய்த தவறுகளை எண்ணிப்பார்த்து, மனம் வருந்துகின்ற உள்ளமே நொறுங்கிய உள்ளம். நன்மை செய்தவருக்கு எதிராகச் செய்த தவறுகளை நினைத்துப்பார்க்கிறபோது, குற்ற உணர்வுகள் மேலோங்கி, தன்னையே வெறுக்கக்கூடிய மனநிலை, இவ்வளவுக்கு கீழ்த்தரமாக இருந்திருக்கிறோமே என்று கழிவிரக்கம் கொள்கிற நிலை தான், நொறுங்கிய உள்ளம். தனக்கு மன்னிப்பு கிடையாதா? தான் தவறு செய்தவர், தன்னுடை பலவீனத்தைப் புரிந்துகொண்டு தனக்கு மன்னிப்பு வழங்கிட மாட்டாரா? என்று வேதனையோடு, மனத்தாழ்மையோடு, ஏக்கத்தோடு காத்திருக்கிற நிலை தான் நொறுங்கிய உள்ளம்.
திருப்பாடல் ஆசிரியர், நொறுங்கிய உள்ளத்தினராகக் காணப்படுகிறார். தன்னுடைய வாழ்வில் ஏராளமான நன்மைகளைச் செய்த இறைவனுக்கு எதிராக, தான் தவறுகளைச் செய்துவிட்டேனே, நன்றி உணர்வு இல்லாமல் வாழ்ந்துவிட்டேனே என்று வேதனைப்படுகிறார். அந்த நொறுங்கிய உள்ளத்தோடு கடவுளை ஏறெடுத்தும் பார்க்கத் துணியாமல், மன்னிப்பு வழங்குவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்குமா? என்று ஏங்கிநிற்கிறார். என்ன ஆச்சரியாம்! இறைவன் அவருக்கு முழுமையான மன்னிப்பை வழங்கிவிட்டார். அவரது பாவங்களையெல்லாம் மன்னித்துவிட்டார். பழைய குற்றங்களையெல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே எண்ணாது விட்டுவிட்டார். அந்த இறையனுபவத்தைத்தான் பாடலாக வடிக்கிறார். இந்த மன்னிப்பு அனுபவத்தில் மற்றொரு செய்தியையும் பெற்றுக்கொள்கிறார். கடவுளுக்கு உகந்த பலி, எரிபலி அல்ல. மாறாக, நொறுங்கிய உள்ளம் தான் என்பதை, அறிந்துகொள்கிறார். கடவுளின் அன்பையும், அளவுகடந்த இரக்கத்தையும் வியந்துபார்க்கிறார்.
நமது வாழ்க்கையில் நாமும் கடவுள் முன்னிலையில் நொறுங்கிய உள்ளத்தினராக வருவதற்கு தயாராக இருக்கிறோமா? கடவுள் முன்னிலையில் நம்முடைய குற்றங்களையெல்லாம் அறிக்கையிட்டு, பாவமன்னிப்புப் பெற்று, உண்மையான இறையன்பைச் சுவைத்து, வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு முயற்சி எடுக்கிறோமா? என்று சிந்தித்துப்பார்ப்போம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்