நேர்மையில் நிலைத்திருந்து ஆண்டவரின் முகம் காண்பேன்
திருப்பாடல் 17: 1, 2 – 3, 6 – 7, 8, 15
தன்னுடைய எதிரிகளின் சூழ்ச்சிகளாலும், தொடர் தேடுதல் வேட்டையினாலும் பெருத்த மன உளைச்சலுக்கும், விரக்திக்கும் ஆளாகியிருக்கிறார் தாவீது மன்னர். எங்கே தப்பிச்சென்றாலும், நிழல் போல தன்னுடைய எதிரிகள் தன்னை பின்தொடர்வதைக் கண்டு, மனம் வெதும்புகிறார். வேதனையின் உச்சத்திற்கே செல்கிறார். சாதாரண மனிதனாக, தன்னால் வாழ முடியவில்லையே என்று வேதனைப்படுகிறார். விரக்தியின் விளிம்பில் அவர் கடவுளை நோக்கி கூக்குரலிடுகிறார். இறைவனுடைய பாதுகாப்பிற்காகவும், புகலிடத்திற்காகவும் வேண்டப்படுகின்ற பாடலாக இது அமைந்திருக்கிறது.
கடவுளிடம் தன்னுடை விண்ணப்பத்தை எடுத்துரைக்கிறபோது, தன்னுடைய நேர்மைத்தனத்தை அவர் விவரிக்கிறார். இவ்வளவு சூழ்ச்சிகள், வேதனை, நெருக்கடி, துன்பங்களுக்கு நடுவிலும், தான் கொண்டிருக்கிற நேர்மைத்தனத்தில் நிலைத்திருக்கும்படியாக ஆண்டவரிடத்தில் மன்றாடுகிறார். நேர்மையாக வாழ்ந்ததற்கு பரிசு கிடைக்கவில்லையே என்று தாவீது மனம் வெதும்பவில்லை. அழுது புலம்பவில்லை. இறைவனிடத்தில் முறையிடவில்லை. மாறாக, தன்னுடை நேர்தை்தனத்தில் தொடர்ந்து வளர, உறுதியாக இருக்க வேண்டுகிறார். தன்னுடைய எதிரிகளிடமிருந்து இறைவன் ஒருவரால் மட்டும் தான், தன்னை விடுவிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறார். அதனை பாடலாக எடுத்துரைக்கிறார்.
நாம் கடவுளுக்கு ஏற்ப வாழ்கிறபோது, அவருடைய திருவுளத்தின்படி வாழ்கிறபோது, நெருக்கடிகள் வரலாம். அப்போது, நாம் கடவுளைப் பார்த்து, முறையிட வேண்டியதில்லை. கடவுளை பழிக்க வேண்டியதில்லை. மாறாக, நம்முடை நேர்மை உண்மை என்றால், அந்த நேர்மைத்தனத்தில் நிலைத்திருக்க ஆண்டவரிடம் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்