நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூறுங்கள்
திருப்பாடல் 90: 3 – 4, 12 – 13, 14 & 17
இன்றைக்கு தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது. இடிந்தகரையில் நடந்து கொண்டிருக்கும் அணு உலைக்கு எதிரான தொடர்போராட்டம், இளைஞர்களின் எழுச்சியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம், கதிராமங்கலம் கிராமத்து மக்களின் வாழ்வாதாரப் போராட்டம், தலைநகரையே உலுக்கிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம், மதுவிற்கு எதிரான மக்கள் போராட்டம் என இதுவரை தமிழகம் கண்டிராத எழுச்சியை மக்கள் பார்த்து, வியந்து கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டங்கள் உணர்த்தும் மற்றொரு முக்கியமான செய்தி, இன்றைக்கு மக்களுக்கான அரசுகள் இயங்கவில்லை என்பதுதான்.
இன்றைய திருப்பாடல், ஒரு அரசு எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வருகிறது. கடவுளின் அரசு எப்படி அமைந்திருக்கிறது என்பதனை விளக்கமாகச் சுட்டிக்காட்டும் பாடலாகவும் இது அமைகிறது. கடவுள் நீதியையும், நேர்மையையும் கொண்டு ஆட்சி செய்கிறார். தீமையை வெறுப்போர் அனைவரும் ஆண்டவரின் அன்புக்குரியவர்கள் ஆகின்றனர். கடவுள் நீதிக்காகப் போராடுகிறவர்களை வெறுமனே விட்டுவிடவில்லை. மாறாக, அவர்களை கண்ணின் மணிபோல் பாதுகாக்கின்றார். இன்றைய மக்களாட்சியின் தலைவர்கள் யாவரும், இறைவனிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடமாக இந்த திருப்பாடல் அமைகிறது.
மக்களை மக்களே ஆட்சி செய்வது நிச்சயம், இந்த சமுதாயம் வளர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால், தவறான மனிதர்களிடத்தில் ஆட்சியும், அதிகாரமும் சென்றால், ஒரு நாடு எவ்வளவுக்கு மோசமாக அமையும் என்பதை, இன்றைய அரசியலை இழிவுபடுத்தும் தலைவர்கள் நமக்கு வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இருளைப் பழிப்பதை விட ஒளியேற்றுவது மேல் என்கிற பழமொழியைப் போல, நாமாவது நம்முடைய வாழ்வில் நேர்மையாளர்களாக இருப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்