நெஞ்சே ஆண்டவருக்காகக் காத்திரு
திருப்பாடல் 27: 1, 4, 13 – 14
ஒருவரின் உள்ளத்தில் கவலையும் கலக்கமும் எழுகிறபோது, பலவிதமான கேள்விகள் உள்ளத்தில் தோன்றுகிறது. கடவுள் இருக்கிறாரா? அப்படி இருந்தால் இவ்வளவு கவலைகள் நமது வாழ்க்கையில் வருமா? இந்த கேள்விகள் எல்லாருக்கும் தோன்றாது. மாறாக, கடவுளுக்கு பயந்து வாழக்கூடிய ஒரு சிலருடைய வாழ்வில் நிச்சயம் இது தோன்றும். இந்த கேள்விகள் எழக்கூடிய தருணங்கள் கடினமான, கடுமையான தருணங்கள். காரணம், நம்பிக்கை இழக்கக்கூடிய தருணங்களில் மற்றவர்களின் வழிகாட்டுதல் இல்லையென்றால், அது கடவுள் நம்பிக்கையோ சீர்குலைத்துவிடும்.
இப்படிப்பட்ட மோசமான தருணத்தில் தான், திருப்பாடல் ஆசிரியரும் இருக்கிறார். அவருடைய உள்ளத்தில் பலவிதமான கேள்விகள் தோன்றுகிறது. அவைகளுக்கு அவரால் பதில் சொல்லி சமாளிக்க முடியவில்லை. என்ன செய்வது? எப்படி இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வது என்கிற ஏக்கம் அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுவதை நம்மால் உணர முடியும். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலாக அவர், ”காத்திரு” என்கிற பதிலை கண்டுபிடிக்கிறார். தன்னுடைய உள்ளத்தை பொறுமையாகக் காத்திருக்கச் சொல்கிறார். எப்படியும் கடவுள் தனக்கு மிகச்சரியான பதிலை வழங்குவார். அதுவரை நான் காத்திருக்க வேண்டும் என்று தன்னுடைய உள்ளத்திற்கு கட்டளையிடுகிறார்.
நம்முடைய வாழ்க்கையில், நாம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு உடனடியாக கடவுள் பதில் தர வேண்டும் என்று நினைப்பது சரியான பார்வையாக இருக்காது. பொறுமையாக காத்திருக்க வேண்டும். கடவுள் நிச்சயம் நமக்கு உதவி செய்வார் என்கிற, நம்பிக்கையோடு காத்திருக்கிறபோது, அதற்கான பதிலை நாம் நிச்சயம் பெற்றுக்கொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்