“நீ பேறுபெற்றவன்” !
“யோவானின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன் ” என்று ஆண்டவர் இயேசு பேதுருவைப் பாராட்டுகின்றார். எதற்காக இந்தப் பாராட்டு? “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ” என்று இயேசுவைப் பற்றிய விசுவாச அறிக்கை இட்டதற்காக. ஆம், இயேசுவைக் கடவுளாக, வாழும் கடவுளின் மகனாக, மெசியாவாக ஏற்று, அதனை அறிக்கை இடுவது என்பது ஒரு பேறு. அந்தப் பேறு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. உலக மக்கள் தொகையில் இரண்டு பில்லியன் மக்களைத் தவிர, மற்ற அனைவருக்கும் அந்தப் பேறு கிடைக்கவில்லை. அந்தப் பேறு கடவுளின் கொடை. விசுவாசம் என்பது இறைவன் வழங்கும் இலவசப் பரிசுதானே ஒழிய, மனித உழைப்பின் பயன் அல்ல. இத்தவக் காலத்தில் நாம் சிந்திக்க வேண்டியது: இறைவன் எனக்குத் தந்த விசுவாசம் என்னும் கொடைக்கு எனது மறுமொழி என்ன? இயேசுவை “ஆண்டவர்” என்று அறிக்கையிடும் பேற்றினை இறைவன் எனக்குத் தந்துள்ளார். எனது பொறுப்பு என்ன? இத்தவ நாள்களில் இயேசுவை ஆண்டவராக, வாழும் கடவுளின் மகனாக நம் வாழ்வின் மூலம் பறைசாற்றுவோமா!
மன்றாடுவோம்: வாழும் கடவுளின் மகனான இயேசுவே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். உம்மை ஆண்டவராகவும், இறைமகனாகவும் அறிக்கையிடும் பேறுபெற்றவர்களாக எங்களையும் மாற்றினீரே. உமக்கு நன்றி. எங்கள் விசுவாச அறிக்கை செயல் வடிவில் மாற்றம் பெற அருள்தாரும். இந்த நாள் முழுதும் எனது ஒவ்வொரு செயலாலும் உம்மை என் ஆண்டவராக அறிக்கை இட அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~ அருள்தந்தை குமார்ராஜா