நீதி வழங்கும் இறைவன்
1அரசர்கள் 21: 1 – 16
ஆண்டவர் எப்போதும் ஏழைகள் பக்கமும், நியாயத்தின் பக்கமும் நிற்கிறார் என்பதற்கு இன்றைய வாசகம் சிறந்த சாட்சியாக அமைகிறது. இறைவன் இந்த உலகத்திலிருக்கிற எல்லாரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்று விருப்பம் கொண்டிருக்கிறார். அந்த விருப்பத்தோடு தான், இந்த உலகத்தைப் படைத்தார். படைப்பின் சிகரமாக மனிதனைப் படைத்த இறைவன், அவனுக்கு இந்த உலகத்தின் எல்லா செல்வங்களின் மீதும் நிர்வகிக்கிற பொறுப்பை வழங்குகிறார். எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதுதான், இறைவன் இந்த உலகத்தைப் படைத்ததன் நோக்கமாகும்.
பேராசை கொண்ட மனிதன், இந்த உலகத்தை அடக்கி ஆள வேண்டும் என்று எண்ணுகிறான். அங்கே அடிமைத்தனம் உருவாகிறது. வளங்களைக் கொள்ளையடிக்கிறான். பொருளாதாரப் பிளவை உண்டாக்குகிறான். நாம் வாழ்கிற இந்த உலகத்தில் மட்டுமல்ல. ஆண்டாண்டு காலமாக, அதிகாரவர்க்கமும், அவர்கள் அடக்கி ஆள்வதற்கு பாமரரர்களும் இருந்து கொண்டே தான் இருக்கின்றனர். இறைவன் எப்போதும் எளியவர்களுக்கு பாதுகாப்பாகவும், ஏழைகள் சார்பாகவும், மக்களுக்கு சரியான நீதியை வழங்குகிறவராகவும் இருந்து வந்திருக்கிறார். அதனையே தொடர்ந்து செய்து வருகிறார். இறைவனின் நீதி உலக மக்களுக்குக் கிடைக்க நாம் அனைவரும் அவருடைய கருவிகளாக செயல்படுவதற்கு, இந்த வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது.
இறைவன் நமக்கு வழங்குகிற இந்த அன்பும், அரவணைப்பும் நமக்கு எப்போதும் கிடைக்க வேண்டும். இறைவனிடமிருந்து நாம் பெறுகின்ற அன்பை, நாம் மட்டும் வைத்துக் கொள்ளாமல் அனைவரும் பெறக்கூடிய வகையில் சிறப்பாக செயல்பட மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்