நீதி எங்கே? நியாயம் எங்கே?
இயேசு தொழுகைக்கூடத்தில் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கிறார். போதனை என்பது வார்த்தையோடு நின்றுவிடுவது கிடையாது. வாழ்வைத் தொட வேண்டும். வாழ்வைத் தொடாத போதனையும், வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தாத போதனையும், வெறும் சடங்குதான். இயேசு தனது போதனை அவ்வாறு இருக்க விரும்பவில்லை. எனவே, அவர் போதித்துக்கொண்டிருக்கிறபோதே, மக்களுக்கு இறைவனுடைய அருளையும் பெற்றுத்தந்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு சுகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
அவ்வாறு மக்களின் நோய்களைக் குணப்படுத்திக்கொண்டிருக்கிறபோது, தொழுகைக்கூடத்தலைவன் மக்களிடத்தில், தனது கோபத்தைக் காட்டுகிறான். ஓய்வுநாளில், இயேசு குணப்படுத்துவது அவனுக்குப்பிடிக்கவில்லை. ஏனென்றால், சட்டப்படி, அது ஓய்வுநாளை மீறிய செயலாகும். எனவே, தான் சொல்வது நியாயம் என்று நினைக்கிறான். ஆனால், இயேசுவிடம் சொல்லத்துணிவில்லாமல், சாதாரண பாமர மக்களிடத்தில் காட்டுகிறான். ஒருவேளை, அவன் இயேசுவிடம் சொல்லியிருந்தால், அவர் விளக்கம் சொல்லியிருப்பார். ஆனால், அவனோ, மக்களிடத்தில் தனது கோபத்தைக்காட்டுகிறான். அதனால், இயேசுவின் கோபத்திற்கு ஆளாகிறான்.
இன்றைக்கு, நாமும் இந்த தொழுகைக்கூடத்தலைவன் போலத்தான் இருக்கிறோம். நம்மைவிட கீழாக உள்ளவர்களிடம், நமது அதிகாரத்தையும், ஆணவத்தையும் காட்டுகிறோம். நம்மைவிட, அதிகாரத்தில் மேலுள்ளவர்களிடம், அவர்கள் செய்வது தவறு என்றாலும், அடங்கிப்போகிறோம். பத்து ரூபாய் பசிக்காகத் திருடியவனை, நீதிமன்றம் குற்றவாளி என்கிறது. அவனுக்கு சிறைத்தண்டனை விதிக்கிறது. பத்தாயிரம் கோடி திருடிய அரசியல்வாதியை மரியாதையாக நடத்துகிறது. அவர்களுக்குப் பணிந்து போகிறது. எங்கே இருக்கிறது இந்த உலகத்தில் நீதி?
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்