நீதிக்காக குரல் கொடுப்போம்
திருத்தூதர் பணி 6: 8 – 10, 7: 54 – 60
திருச்சபையின் முதல் மறைசாட்சி என்று அழைக்கப்படும் ஸ்தேவானின் இறப்பு இன்றைய முதல் வாசகத்தில் நமக்கு கொடுக்கப்படுகிறது. அவருடைய இறப்பு கொடூரமானது, கொடுமையானது. கல்லெறிந்து கொலை செய்யப்படுகிறார். அதே வேளையில், அவருடைய இறப்பு ஒருபுறத்தில் இயேசுவின் இறப்பை ஒட்டியதாக இருக்கிறது. இயேசு கொடுமையாக சிலுவையில் அறையப்பட்டார். அந்த தருணத்திலும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்காக விண்ணகத்தந்தையிடத்தில் பரிந்து பேசுகிறார். அதே போல ஸ்தேவானும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்காக, விண்ணகத்தை நோக்கி மன்றாடுகிறார்.
இந்த நிகழ்வு, ஒரு சவாலான பாடத்தையும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. ஆண்டவராகிய இயேசு இறந்து உயிர்த்தெழுந்து விட்டார். சாவை எதிர்த்து வெற்றி கொண்டுவிட்டார். ஆனாலும், பாவம் தொடர்கிறது. சாவுக்கும் வாழ்வுக்கும் இடையேயான போராட்டம் அவ்வளவு எளிதாக முடிந்து விடாது. இந்த போராட்டத்தில் ஒவ்வொருவரும் கடவுளின் பக்கம் நின்று போராட வேண்டும் என்பது தான் நம் முன்னால் இருக்கிற சாட்சி. இயேசுவின் இறப்போடு, மண்ணகத்தில் நேர்மையாளர்கள் இரத்தம் சிந்துவது நின்றுவிடப்போவதில்லை. வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கிறபோது, இயேசுவின் இறப்பிற்குப் பின் வரலாற்றில் எத்தனையோ நேர்மையாளர்கள் நல்ல விழுமியங்களுக்காக தங்கள் உயிரைத் துறந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நாம் எப்போதுதும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
நம்முடைய வாழ்வில் நாம் நீதியின் பக்கம் நிற்கிறோமா? அநீதியின் பக்கம் நிற்கிறோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம். தீமைக்கு எதிரான போராட்டத்தில் நம்முடைய பங்கு என்ன? என்று நம்மையே கேட்டுப் பார்ப்போம். எந்த வழிகளில் எல்லாம் நம்மால், சிறப்பாக இந்த போராட்டத்தில் பங்கெடுக்க முடியுமோ, அத்தனையிலும் நாம் சிறப்பாக பங்கெடுக்க இறையருள் வேண்டி மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்