நீதிக்காக குரல் கொடுக்கும் இயேசு
இயேசு தன்னுடைய சீடர்களின் சார்பாக வாதாடுகிறார். இயேசுவின் சீடர்கள் ஓய்வுநாளில் கதிர்களை பறிக்கிறார்கள். குற்றம் கண்டுபிடிப்பதற்காகவே காத்திருக்கிற ஒரு கூட்டத்தினர், இயேசுவின் சீடர்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஏன் இயேசுவின் சீடர்கள் மீது அவர்கள் குற்றம் சுமத்த வேண்டும்? எவ்வளவோ குற்றங்களை இயேசுவின் மீது சுமத்தியாயிற்று. ஆனால், இயேசு தனது அறிவாற்றலால் வெகுஎளிதாக அதிலிருந்து மீண்டு வந்து விடுகிறார். எனவே, இயேசுவுக்குப் பதிலாக, அவருடைய சீடர்களை இப்போது தாக்க ஆரம்பிக்கிறார்கள். சீடர்களை குற்றவாளிகளாக மாற்ற, அவர்கள் இந்த குற்றச்சாட்டுக்களைச் சொன்னாலும், அவர்களின் இலக்கு என்னவோ இயேசுதான். ஆனால், அதையும் இயேசு தவிடுபொடியாக உடைத்து எறிகிறார்.
இயேசு தன்னுடைய சீடர்கள் தவறு செய்ததாக நினைக்கவில்லை. அவர்கள் தவறு செய்யவில்லை என்பதுதான் யதார்த்தம். அவர்கள் வேண்டுமென்றோ, சட்டத்தை மீற வேண்டுமென்றோ, கதிர்களைப் பறித்து தின்னவில்லை. அந்த கதிர்களை திருடி விற்று, இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணமும் அவர்களுக்கு இல்லை. பசிக்காக, தங்களின் பசியை ஆற்றுவதற்காக அந்த கதிர்களைப் பறிக்கிறார்கள். இங்கே இயேசு தன்னுடைய சீடர்களின் உள்மனதை அறிந்தவராக, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவர்களுக்காக வாதாடுகிறார். யார் சரி? என்பதைக்காட்டிலும், எது சரி? என்பதை அடித்தளமாகக் கொண்டு வாதாடுகிறார்.
இன்றைக்கு, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் பணத்திற்காக, பதவிக்காக, அதிகாரத்திற்காக நீதி, நியாயம் விற்கப்படுகிறது. சட்டத்தில் ஓட்டைகளை ஏற்படுத்தி, அதிகார மையத்தினர் தவறு செய்கிறபோது, அவர்களை தப்பிக்க ஏற்பாடு செய்ய நீதிமன்றங்களும், அதிகாரவர்க்கமும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்து கொண்டிருக்கின்றன. சாதாரண பாமரனோ, ஒன்றுமில்லாதவற்றிற்கு தங்களது வாழ்வையே சிறையில் கழிக்கும்படி, இந்த அதிகாரவர்க்கம் செய்துவிடுகின்றன. எப்படி இந்த முரண்பட்ட சமுதாயத்தைச் சீர்திருத்தப் போகிறோம்? சிந்திப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்