நீங்கள் சுறுசுறுப்பானவரா? அல்லது தளர்வுற்றவரா?
மத்தேயு 11:28-30
நீங்கள் சுறுசுறுப்பானவரா? அல்லது தளர்வுற்றவரா? என்ற கேள்வியோடு நாம் கருத்துக்கணிப்பு நடத்தினால் வாழ்க்கையில் பல மனிதர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவதில்லை. மாறாக தளர்வுற்றவர்கள் தான் என்பது தெரிய வரும். வாடிய முகத்தோடு அவா்கள் நடப்பதைப் பார்க்கின்றபோது அவர்களிடத்தில் ஆற்றல் தீர்ந்துபோய் விட்டது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
உங்களிடத்திலே சுறுசுறுப்பாக செயல்படுவதற்கான ஆற்றல் தீர்ந்துவிட்டது என்றால் கவலை வேண்டாம். அந்த ஆற்றலைப் பற்றித்தான் இன்றைய நற்செய்தி வாசகம் பேசுகிறது. அந்த ஆற்றலை தருபவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.
பெருஞ்சுமைகளை இறக்கி வையுங்கள். கவலைகளை கொட்டுங்கள். சோகங்களை சொல்லுங்கள். உங்கள் துயரத்தின் புலம்பலை பற்றி பேசுங்கள். கவலை, சோகம், துயரம், பிரச்சினை, நோய் இவைகள் தானே உங்கள் ஆற்றலை உங்களிடமிருந்து பிடுங்கியது. அதனால்தானே நீங்கள் தளர்வுற்றுப் போனீர்கள்? அதைப்பற்றி கவலைப்படாதீர்ள். இப்போது எல்லாவற்றுக்கும் இளைப்பாறுதல் பெறுங்கள். அனைத்து ஆற்றலையும் அள்ளுங்கள். நிறைய அள்ளுங்கள். ஆண்டவரே அந்த ஆற்றல்.
மனதில் கேட்க…
• இனியும் நான் தளர்வுற்று இருப்பேனா?
• என் ஆற்றல் என் ஆண்டவர் என்பது எனக்கு தெளிவாக தெரிகிறதா?
மனதில் பதிக்க…
“ஆண்டவர் என் வலிமை, என் கேடயம், அவரை என் உள்ளம் நம்புகின்றது (திபா 28:7)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா