நிலைவாழ்வு
இந்த உலகத்தில் வாழக்கூடிய நம் அனைவரின் எண்ணம், ஏக்கம், சிந்தனை அனைத்துமே மறுஉலகத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. ஏனென்றால், இந்த உலகம் நமது நிலையான உலகம் அல்ல. மாறாக, அடுத்த வரக்கூடிய உலகம் தான், நிலையான உலகம். அந்த வகையில் நாம் எப்போதுமே, வரக்கூடிய உலகத்திற்காக நம்மையே தயாரிக்க வேண்டும். இதனுடைய பொருள், இந்த உலகத்தை பொருட்படுத்த தேவையில்லை என்பது அல்ல. மாறாக, இந்த உலகத்தை நிறைவோடு வாழ வேண்டும் என்பதுதான்.
இயேசுவின் போதனையும் இதனை அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்திருக்கிறது. இயேசு எப்போதுமே நமக்கு இரண்டுவிதமான வாய்ப்புக்களைத்தருகிறார். விண்ணகத்திற்குள்ளாக நாம் நுழைவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்தால் நாம் விண்ணகத்திற்குள் நுழைவதற்கு மறுக்கப்படுவோம் என்று அடிக்கடி தனது போதனையின் வழியாகக் கற்றுக்கொடுக்கிறார். அதனுடைய ஒரு பகுதிதான் இன்றைய நற்செய்தி வாசகம். விண்ணகத்திற்குள் செல்வதற்கு நாம் எப்படி நம்மையே தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என, ஆலோசனையுடன் கூடிய எச்சரிக்கை உணர்வை இயேசு தருகிறார்.
இயேசுவின் போதனையை நாம் எளிதான வகையில் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், அது வாழ்வு தரக்கூடியது. அது நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்லக்கூடியது. அந்த நிலைவாழ்வை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நிச்சயமாக இயேசுவின் போதனையைில் நம்முள் ஏற்று, சிறப்பாக வாழ முயற்சி எடுப்போம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்