நிலையான பேரின்ப வாழ்வு
இயேசுவுக்கும், யூதச்சங்கத்தினருக்கும் நடைபெறும் இந்த வாக்குவாதம் யெருசலேம் ஆலயத்தின் கருவூலப்பகுதியில் நடைபெறுகிறது. ஆலயக்கருவூலப்பகுதி ஆலயத்தின் பெண்கள் முற்றத்தில் அமைந்திருந்தது. யெருசலேம் ஆலயத்தின் முதல் முற்றம் புறவினத்தார்க்கு உள்ள முற்றம். இரண்டாம் முற்றம் பெண்களுக்கானது. பெண்கள் முற்றத்தைச்சுற்றி அமைந்த சுவற்றில் 13 இடங்களில் காணிக்கை செலுத்துவதற்கு ஏதுவான வகையில் ‘எக்காளம்’ போன்ற ஒரு அமைப்பை வடிவமைத்திருந்தனர். ஒவ்வொரு காணிக்கைப்பெட்டியிலும் போடும் பணமும், குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. முதல் இரண்டு காணிக்கைப்பெட்டிகளில் ஒவ்வொரு யூதரும் செலுத்த வேண்டிய ஆலய வரிக்கான பணமாகும். 3 வது மற்றும் 4வது பெட்டிகளில், தூய்மைப்படுத்தும் சடங்கிற்காக காணிக்கை செலுத்தப்படும் இரண்டு மாடப்புறாக்கள் வாங்குகிற பணம் செலுத்தப்பட்டது. 5வது பெட்டியில், பலிசெலுத்துவதற்கு வாங்கப்படும் விறகுகளை வாங்குவதற்குப் பயன்பட்டது. 6வது பெட்டியில் சாம்பிராணி வாங்குவதற்கான காணிக்கை போடப்பட்டது. ஏழாவது பெட்டியில், பலிசெலுத்தப்பயன்படும் தங்கப்பாத்திரங்களை பராமரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. ஏனைய 6 காணிக்கைப்பெட்டிகளில், தங்களுடைய விருப்பக்காணிக்கைகளை மக்கள் போடுவது வழக்கமாக இருந்தது. எனவே, இந்த ஆலயக்கருவூலப்பகுதி எப்போதுமே மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக இருந்தது. இத்தகைய ஆலயத்தின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் வாக்குவாதம் நடைபெறுகிறது.
கூடாரத்திருவிழாவின் முதல் நாளில் மாலை வேளையில், ஒளியின் திருவிழா ஆலயத்தின் பெண்கள் முற்றத்தில் உள்ள வளாகத்தில் கொண்டாடப்பட்டது. வளாகத்தின் நடுவில் நான்கு மிகப்பெரிய தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்த தீபங்கள் யெருசலேம் முழுவதற்கும் ஒளி தருமாறு, ஏற்றப்பட்டது. மாலையில் ஏற்றப்படும் இந்த தீபம் அடுத்தநாள் காலை வரை எரிந்து ஒளிதரும். இந்த ஒளியின் முன்னால் இஸ்ரயேலின் பெரியவர்கள் ஆடிப்பாடி மகிழ்வார்கள். இயேசு இந்தப்பிண்ணனியில் தான், நானே உலகின் ஒளி என்கிறார். அதாவது, இங்கே இந்த முற்றத்தில் எரியவிடப்படும் தீபம் மாலை எரிந்து காலையில் அணைந்து விடும். யெருசலேம் நகர் மட்டும் ஒளி கொடுக்கும். ஆனால், நானோ வாழ்வு முழுவதும், இந்த உலகத்திற்கே ஒளி கொடுக்கும் விளக்கு என்று இயேசு சொல்கிறார். கிரேக்கத்தில் ஒளி என்பதை வாழ்வு தரக்கூடியதாக ஒப்பிடுகிறார்கள். எவ்வாறு ஒளி இல்லாமல், பூக்கள் மலராதோ, அதேபோல் இயேசு என்னும் ஒளி இல்லாமல் நமது வாழ்வு மலர முடியாது. இங்கே நமக்குத் தரப்படும் பதில்: இயேசு இல்லாமல் நமக்கு வாழ்வு இல்லை. இயேசுவை பின்பற்றிச்சென்றால் மட்டுமே நமக்கு வாழ்வு உண்டு என்பதுதான்.
வாழ்வு என்பது இந்தப்பூமியில் வாழ்கிற வாழ்வு மட்டுமல்ல, இறப்பிற்கு பின்னாலும் வாழப்படுகிற வாழ்வு. அந்த நிலையான வாழ்வைப்பெற நாம் இயேசுவைப் பின்பற்ற வேண்டும். அதாவது, இயேசு நமக்கு கற்றுத்தந்திருக்கிற வாழ்வின் மதிப்பீடுகளை நாம் வாழ்வில் பின்பற்ற வேண்டும். அத்தகைய வாழ்வு நமக்கு நிலையான பேரின்ப வாழ்வைப்பெற்றுத்தரும்.
~அருட்பணி. தாமஸ் ரோஜர்