நிறைவோடு வாழ…
பாரசீகர்கள் மத்தியில் செய்திகளைச்சுமந்து செல்வதற்கு வசதியாக ஒரு பழக்கம் இருந்தது. அனைத்து சாலைகளும், பல இலக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. செய்தியைச் சுமந்து செல்கிறவர் குறிப்பிட்ட தூரத்திற்குச் சென்று, அதை அந்த இலக்கில் காத்துக்கொண்டிருக்கிறவரிடம் கொடுக்க வேண்டும். அதை அவர் அடுத்த இலக்கிற்கு சுமந்து செல்வார். செய்தியைக் கொண்டுவருகிறவருக்கும், அவருடைய குதிரைக்கும் தேவையான உணவு மற்றும் தங்கிச்செல்ல வசதி, குறிப்பிட்ட இலக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அப்படி இல்லையென்றால், அங்கே இருக்கிறவர்கள் அனைத்தையும் அவருக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். இதேமுறை, உரோமையர்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டிருந்த, பாலஸ்தீனத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது.
உரோமை காவலர்கள் தனது ஈட்டியால் யாரையாவது தொட்டால், அதனுடைய பொருள், அவர் உடனடியாக உதவி செய்ய வேண்டும். இயேசு சிலுவை சுமந்து சென்றபோது, சீமோன் உதவி செய்ய வந்தது இப்படித்தான். அதை மீறினால், அவர்கள் தண்டிக்கப்படுவர். இந்த பிண்ணனியில் தான், இயேசு இந்த செய்தியை நமக்குச்சொல்கிறார். இயேசுவின் செய்தி இதுதான்: மற்றவர்கள் நம்மைக் கட்டாயப்படுத்திச் செய்யச்சொல்லும் செயலை, முகம் கோணாமல், வெறுப்போடு அல்லாமல், மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். அதை எரிச்சலோடு அல்லாமல், நிறைவோடு, பொறுப்பாக உணர்ந்து, நல்ல மனத்தோடு செய்ய வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. தன்னை ஒறுத்து, மற்றவர் வாழ கையளிப்பதுதான் உண்மையான சாட்சிய வாழ்வு.
வாழ்க்கையில் நாம் பலவற்றை வெறுப்போடும், எரிச்சலோடும் செய்து வருகிறோம். மற்றவர்களுக்கு உதவுவதாக இருக்கட்டும், மற்றவர்களுக்காக வாழ்வதாக இருக்கட்டும். அனைத்தும் நிறைவோடு, மகிழ்ச்சியோடு செய்யப்பட இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். அதை ஏற்று, நமது வாழ்விலும் செய்கிறவற்றை, நிறைவோடு செய்ய கற்றுக்கொள்வோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்