நிறைவை நிறைவானவரிடம் கேட்க, தேட, தட்ட
மத் 7 : 7- 12
நிறைவை நிறைவானவரிடம் கேட்க, தேட, தட்ட
இத்தவக்காலத்தில் செபத்தின் முக்கியத்துவத்தையும், செபிப்பதின் விளைவுகளையும், நாம் எப்படி செபிக்க வேண்டும் என்பதையும் பல கோணங்களில் பார்க்கிறோம். இன்றைய நற்செய்தியும் செபத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தையும், ஆன்மீகத்தையும் நமக்கு எடுத்துரைக்கிறது. ‘கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்’ என்றவுடன் நாம் நமது தேவைகளை மளிகைக்கடை பட்டியல் போல எடுத்துவிட ஆரம்பித்து விடுகிறோம். அது பல நேரங்களில் எங்கு? எப்படி? தொடங்குகிறது என்றே தெரியாது. குறிப்பாக இன்று பலபேர் அருட்கொடை இயக்கத்தில் செபிப்பது போலவே செபிப்பது செபம் என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் ஆண்டவர் நாம் கேட்கின்ற பொருளாதாரக் காரியங்களை விரும்பிக் கேட்பாரோ என்றால் அது கேள்விக் குறியே! காரணம் அவர் செல்வந்தர்களின் மனநிலையை அடியோடு வெறுக்கிறார். மிகுதியான உடைமைகளை வைத்திருப்பவர்களை அடித்து விரட்டுகிறார். இன்னுமொரு இடத்தில் “நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது, நீங்கள் உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்” (மத் 6 : 6) அங்கே கதவை அடைக்கச் சொன்னவர், இங்கே திறக்கப்படும் என்று சொல்கிறார். அப்படியிருக்க இது என்ன செபம்? இது எதைக் குறிக்கிறது?
1. கேளுங்கள் கொடுக்கப்படும் – நாம் எதைக்கேட்க வேண்டுமென்றால் எதையும் இறைவனின் திருவுளம் என ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவத்தைக் கேட்க வேண்டும். இதுவே ஆன்மீக முயற்சியாகவும், உண்மையான சீடத்துவமாகவும் இருக்க முடியும். நமக்குத் தவக்காலம் தருகின்ற பார்வை இதுவே.
2. தேடுங்கள் கண்டடைவீர்கள் – உங்களை உங்களுக்குள்ளேயே தேடுங்கள். நான் யார்? நான் ஏன் இறைவனின் சாயல்? எனக்கும் அவருக்குமான தொடர்பு என்ன? அவரை நோக்கியே ஏன் எனது மனம் ஈர்கின்றது? அவரில் நிறைவடைவதே என் முழு நிறைவு – இது ஏன்? இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கு விடையை உங்களுக்குள் தேடும்போது இத்தவக்காலத்தில் கண்டடைவீர்கள்.
3. தட்டுங்கள் திறக்கப்படும் – எப்படி உள்ளறைக்குச் செல்லச் சொன்னாரோ, இன்று அந்த உள்ளறையின் கதவினைத் தட்டிக் கொண்டேயிரு, உனக்குள் நீ சென்று கொண்டேயிருப்பாய். உள்ளே செல்லச் செல்ல தடைகள் அனைத்தும் நீங்கும், உனக்குள் ஓர் உள்ளொளியைக் கண்டுபிடிப்பாய். அதுவே உலகின் ஒளி. அது உன்னை இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்லும்.
திருத்தொண்டர் வளன் அரசு