நிறைவை அடையும் வாழ்வு
திருத்தூதர் பணி 1: 1 – 11
நிறைவை அடையும் வாழ்வு
எந்த ஒரு புத்தகமோ, வரலாறோ, கடிதமோ எழுதினாலும், அதன் நோக்கம் தெளிவாக குறிப்பிடப்படும். திருத்தூதர் பணி நூலானது, தொடக்க கால கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள உதவும் வரலாற்றுக் கருவி என்று சொன்னால் அது மிகையாகாது. நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவின் பிறப்பு பற்றிய முன்னறிவிப்பு, இயேசுவின் பிறப்பு, அவருடைய பணிவாழ்வு, புதுமைகள், பாடுகள், இறப்பு, உயிர்ப்பு மற்றும் விண்ணகம் ஆகியவற்றைப் பற்றி நமக்கு தெளிவாகக் குறித்துக் காட்டுகிறது. அதனுடைய தொடர்ச்சியாக திருத்தூதர் பணி நூலானது பார்க்கப்படுகிறது.
திருத்தூதர் பணி நூலானது லூக்கா நற்செய்தியின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அந்த நூலின் தொடக்கத்திலும், “தெயோபில்“ என்கிற பெயருக்கு எழுதப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. இங்கும் அதே வார்த்தை குறிப்பிடப்படுகிறது. இரண்டு புத்தகங்களின் நடையும் ஒரே மனிதருக்குரியவையாக விவிலிய அறிஞர்களால் பார்க்கப்படுகிறது. திருத்தூதர் பணி எழுதப்படும் நோக்கம் பற்றி, முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இயேசு வெறும் ஆவியாக அல்ல, மாறாக, நம்மில் ஒருவராக, உடலும், உயிரும் கொண்டு உயிர்த்தெழுந்தார் என்பதை, ஆசிரியர் விளக்கிக்கூறுகிறார். உயிர்ப்பின் உறுதித்தன்மையை உறுதிப்படுத்துவதும், தொடக்க கால கிறிஸ்தவர்களின் விசுவாச வாழ்வும் இங்கு நமக்கு தரப்படுகிறது. கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டு, நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்கிற பரந்துபட்ட நோக்கத்தையும் இந்த நூலில் நாம் காணலாம்.
நம்முடைய வாழ்வின் நோக்கம் என்ன? கடவுள் எதற்காக இந்த வாழ்க்கையை நமக்கு தந்திருக்கிறார்? இந்த வாழ்க்கையை நாம் எப்படி சிறப்பாக வாழ முடியும்? என்று, நாம் அவ்வப்போது, நம்முடைய வாழ்வை சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். அப்படிப்பார்க்கிறபோது, நிச்சயம் கடவுள் நமக்கு காட்டுகிற வழியில் நாம் செல்ல முடியும். நிறைவை அடைய முடியும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்