நிறைவைத்தேடி…
நிறைவு என்பதுதான் இந்த உலகத்தில் அனைவரும் தேடி அலைகின்ற ஒன்றாக இருக்கிறது. வாழ்க்கையில் நிறைவை பலவற்றில் நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நிறைவு இல்லாமல் நமது தேடலை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு பலர், நிறைவைத்தராதவற்றில் நமது நேரத்தை வீணடித்துக்கொண்டு நிறைவுக்காக அலைந்து கொண்டிருக்கிறோம். நிறைவு இதில் இல்லை என்று பலர் சொல்லியும், அதனைக் கேட்காமல் தொடர்ந்து அதிலே மூழ்கிக்கொண்டிருக்கிறோம். நாம் எதில் நிறைவைத்தேட வேண்டும் என்பதை நற்செய்தி நமக்குக் கற்றுத்தருகிறது.
விண்ணகத்தந்தை நிறைவாக இருக்கிறார் என்று நற்செய்தி சொல்கிறது. அதற்கான காரணத்தையும் அது தருகிறது. விண்ணகத்தந்தை மற்றவர்களை மன்னிக்கிறார். அனைவரையும் அன்பு செய்கிறார். அனைவரையும் பராமரிக்கிறார். அனைவரையும் தனது பிளளைகளென சமமாகப் பாவிக்கிறார். எனவே தான், விண்ணகத்தந்தை நிறைவாக இருக்கிறார். நாமும் விண்ணகத்தந்தை நிறைவுள்ளவராக இருப்பது போல, நிறைவுள்ளவராக இருக்க வேண்டுமென்றால், மற்றவர்களை மன்னிக்க வேண்டும். அனைவரையும் அன்பு செய்ய வேண்டும்.
இந்த உலக செல்வத்திலும், பதவியிலும், அதிகாரத்திலும் நாம் பெற முடியாத நிறைவை, மன்னிப்பிலும், உண்மையான அன்பிலும், உதவி செய்வதிலும் பெற்றுக்கொள்ளலாம். அது கடினமான பணி அல்ல. ஆனாலும் சவாலான பணி. அந்த சவாலை ஏற்றுக்கொள்ள நாம் தயாரா? சிந்திப்போம். செயல்படுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்