நிதானமே வாழ்வில் பிரதானம்
மரியா இயேசுவின் மீது அதிக அன்பு வைத்திருந்தவர் என்பது நமக்கு நன்றாகத்தெரியும். எனவே தான், யாருக்கும் அஞ்சாமல் விடியற்காலையிலேயே தன்னந்தனி பெண்ணாக கல்லறைக்கு வந்திருக்கிறார். இப்போதும் கூட நாம் கல்லறைகளைப் பார்த்தால் பயப்படுவதுண்டு. அதிலும், சமீபத்தில் தான் இறந்த ஒருவரை அடக்கம் செய்திருக்கிறது என்றால், கேட்கவே வேண்டாம். அந்த கல்லறை அருகில் செல்லவே நாம் பயப்படுவோம். ஆனால், மரியா சாதாரண பெண்ணாக இருந்தாலும், கல்லறைக்குச் சென்றது, அவள் இயேசு மீது வைத்திருந்த ஆழ்ந்த அன்பைக் குறிக்கிறது. அவளது மனம், இயேசு இன்னும் இறக்கவில்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறது. எத்தனையோ பேருக்கு வாழ்வு கொடுத்தவர், பல புதுமைகளை நிகழ்த்தியவர், நிச்சயம் இந்த சாவிலிருந்து எழுந்து வருவார் என்று கூட அவர் நினைத்திருக்கலாம். அதுவே, அவர் அந்த அதிகாலையில் கல்லறைக்கு வருவதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
கல்லறையில் இயேசுவின் உடலைக் காணவில்லை என்றதும், அவளுக்கு நிச்சயம் கண்களில் அழுகை முட்டியிருக்கும். ஆனாலும், நிதானமாக இருக்கிறாள். அங்கே இரண்டு ஆண்களை பார்த்தாலும், பயப்படவில்லை, பதற்றம் அடையவில்லை. கோபப்படவில்லை. அவளைப் பொறுத்தமட்டில் இயேசுவைப் பார்க்க வேண்டும். இவ்வாறு ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் பொறுமையோடு, பதற்றமில்லாமல் வாழ்வை மரியா அணுகுவதற்கு கற்றுக்கொடுக்கிறார். அந்த அதிகாலை வேளையிலும், இயேசுவைக் காணவில்லையே என்ற ஆதங்கம் பல மடங்கு அவளுக்குள்ளாக இருந்தாலும், அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, நிதானமாக அந்த இக்கட்டான சூழ்நிலையைக் கையாளுவது, நிச்சயம் சிறந்த ஒரு வாழ்வியல் மதிப்பீடு.
சாதாரண பிரச்சனை என்றாலே நாம் அழுது ஆர்ப்பரிக்கிறோம். புலம்பித் தவிக்கிறோம். வாழ்வே முடிந்து விட்டது போல பரிதவிக்கிறோம். வாழ்வில் நிதானத்தைக் கடைப்பிடிப்போம். அந்த நிதானம் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். பதற்றம் நிச்சயம் பிரச்சனையை அதிகமாக்கும். வாழ்வில் எல்லாச்சூழலிலும் நிதானமாக வாழ, இறைவனை வேண்டுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்