நாம் வாழும் வாழ்க்கை
இன்றைய நவீன கால, அரசியல் வாழ்வை நாம் கேட்ட நற்செய்தி வாசகம் பிரதிபலிப்பதாக இருக்கிறது. இன்றைக்கு இரண்டுவிதமான வர்க்கங்கள் இந்த உலகத்தில் இருக்கிறது. இன்று மட்டுமல்ல, என்றுமே இருந்திருக்கிறது. 1. அடிமை வா்க்கம் 2. ஆளும் வர்க்கம். தொடக்க காலத்தில், முடியாட்சியில், அதிகாரவர்க்கமான அரசர்கள், மக்களை தங்களது அடிமைகளாக எண்ணினர். அதிகாரவர்க்கத்தினருக்கு பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என எண்ணினர். மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்தாலும், காட்சிகள் மாறவே இல்லை.
தனிநபர் வழிபாடு எங்கும் காணப்படுகிறது. அரசியல், திரைப்படங்கள், விளையாட்டு என்று, எங்கு பார்த்தாலும் தனிநபர் வழிபாடு இந்த சமூகத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. நல்லவர்கள், பொதுநலனுக்காக உழைக்கிறவர்களுக்கு மதிப்பில்லை. அரசியல் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரமாய் மாறிவிட்டது. மக்களும் அதற்கு ஏற்ப வாழ பழகிவிட்டார்கள். கோடிகளை வாரிஇறைத்து, கோடி இலட்சங்களை அள்ளக்கூடிய, அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய், அரசியல் வியாபாரமாகிவிட்டது. மக்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கேற்ப, தங்களது அதிகாரத்தை மக்கள் மீது திணிக்கிறார்கள். இதற்கு, அவர்களின் கையில் இருக்கிற பத்திரிக்கைகள், தொலைக்காட்சி போன்றவை ஊதுகுழலாய் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தியாக உள்ளத்தோடு, நாட்டிற்காக உழைத்த தூய்மையான தலைவர்களின் இருக்கையை, இன்றைய தலைவர்கள் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், நாமாவது அடுத்தவர்களை அதிகாரம் செய்ய நினைக்காமல், மற்றவர்களுக்கு பணிந்து நடக்க நாம் அழைக்கப்படுகிறோம். பொறுப்பு, பணி என்பது நாம் அனுபவிப்பதற்கு அல்ல. அது மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்கு பயன்படுவது. இந்த சமுதாயத்தையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவதற்கு பயன்படுத்துவது. அப்படிப்பட்ட நல்ல குணங்களை நமது வாழ்வில் நாம் வெளிப்படுத்துவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்